இந்திய டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல் – கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி

0
760

இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த கேப்டன்களில் ஒருவர் விராட் கோலி. கடந்த 2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய தொடரின் போது தோனி விலகியதால் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார் கோலி. அப்போது இந்திய அணி தரவரிசையில் 7வது இடத்தில் இருந்தது. கோலி பொறுப்பேற்ற பின்பு தற்போது இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் கேப்டன் கோலி. இந்திய அணியை திறம்பட வழிநடத்தி பல முக்கிய தொடர்களில் கோப்பை வென்று கொடுத்துள்ளார் கோலி. குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மிகப்பெரிய சாதனை படைத்தார் கோலி. கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை திறம்பட வழிநடத்திச் சென்றார். இவ்வளவு பெருமைக்கு சொந்தக்காரரான கோலி தற்போது டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.

இதுவரை அறுபத்தி எட்டு போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ள கோலி 40 போட்டிகளில் வென்று 17 போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளார். 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. வேறு எந்த இந்திய கேப்டனும் இதுவரை இத்தனை வெற்றிகளை இந்திய டெஸ்ட் அணிக்கு பெற்றுக் கொடுத்தது இல்லை. இதுபோக பேட்டிங்கிலும் கோலி அசத்தியுள்ளார். கேப்டனாக 113 இன்னிங்சில் விளையாடியுள்ள இவர் 5864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 20 சதங்களும் 18 அரை சதங்களும் அடங்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, சுழற்பந்து வீச்சை மட்டுமே நம்பிக் கொண்டிருந்த இந்திய அணியை தற்போது மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு கொண்ட அணியாக மாற்றிய பெருமை கோலியையே சேரும். பும்ரா, சிராஜ், ஷமி போன்றோரெல்லாம் விராட் கோலியின் தலைமையின் கீழ் பட்டை தீட்டப்பட்டவர்கள் தான்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி பெற்றதன் விளைவாக கோலி கேப்டன் பதவியை விட்டு விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய கேப்டனாக யார் இருக்க போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.