இன்று ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்று முதல் முறையாக ஆர்சிபி கோப்பையை வென்று இருக்கிறது. இது குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாக விராட் கோலி பேசி இருக்கிறார்.
இந்த போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இரண்டு அணிகளிலும் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
ஆர்சிபி அபார வெற்றி
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள், ஜிதேஷ் சர்மா 10 பந்தில் 24 ரன்கள், ரோமரியோ ஷெப்பர்ட் 9 பந்தில் 17 ரன்கள் எடுத்தார்கள். ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. அசமத்துல்லாஹ் ஓமர்சாய் மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷஷான்க் சிங் ஆட்டம் இழக்காமல் 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்றும் க்ருனால் பாண்டியா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
குழந்தை போல் தூங்குவேன்
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள விராட் கோலி கூறும் பொழுது “நான் ஆர்சிபி அணிக்காக அதிக முக்கியத்துவத்தையும் எனது அனுபவத்தையும் தொடர்ந்து கொடுத்து இருக்கிறேன். கடைசியாக நாங்கள் 18 வது வருடத்தில் கோப்பையை வென்று இருக்கிறோம். இந்த வெற்றியின் காரணமாக இன்று நான் ஒரு குழந்தை போல இரவு தூங்குவேன்”
இதையும் படிங்க : விராட் கோலி பைனல் மேட்ச்ல அப்பட்டமா தப்பு செய்யறாரு.. அம்பயர்கள் கண்டுக்கவே இல்ல – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
“ஏபி டிவில்லியர்ஸ் இந்த அணிக்காக எவ்வளவோ செய்திருக்கிறார் அதையெல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர் ஓய்வு பெற்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்பொழுது வரை அவர் தான் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரராக இருக்கிறார். இந்த கோப்பை எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அவருக்கும் அவ்வளவு முக்கியம் என்று அவரிடம் சொல்லி இருந்தேன். இன்று நாங்கள் கோப்பையை ஏந்தும் போது அவரும் எங்களுடன் மேடையில் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






