தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரை வென்றதற்கான வெற்றி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள விராட் கோலி மிகவும் முக்கியமான விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.
18 வருட ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இந்த ஆண்டு ஆர்சிபி அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. நீண்ட காலமாக ஐபிஎல் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் இருந்து வந்ததால், தற்போது ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளதற்கு பெங்களூரில் நிறைய வரவேற்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி இன்று தனி விமானத்தில் உடனடியாக பெங்களூர் வந்து சேர்ந்தது. அவர்களை கர்நாடக துணை முதலமைச்சர் டிகே.சிவக்குமார் வரவேற்று, அங்கிருந்து ஊர்வலம் சின்னசாமி மைதானத்திற்கு சென்றது.
இந்த ஊர்வலத்தில் ஆர்சிபி அணியின் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். மேலும் விராட் கோலி பேச வந்த பொழுது ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருந்ததால் அவருடைய பேச்சை தொடர முடியவில்லை. மேலும் அவர் கேப்டன் ரஜத் பட்டிதாரை மேடைக்கு சிறப்பான முறையில் அழைத்து வரவேற்றார்.
இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய விராட் கோலி ” எனக்கு அதிக நேரம் இல்லை. எனவே நான் பேச வந்ததை பேச வேண்டும். எங்கள் கேப்டன் சொன்னதை சொல்லி நான் ஆரம்பிக்கிறேன் ஈ சாலா கப் நம்தே இல்லை, ஈ சாலா கப் நம்து! இறுதியாக இதை செய்து விட்டோம். இந்த கோப்பை எனக்கு மட்டும் கிடையாது இங்குள்ள அனைவருக்கும்தான். பல ஆண்டுகளாக நீங்கள் காட்டிய நம்பிக்கையும் அன்பும் அற்புதமானது. உங்கள் போல ஒரு ரசிகப்பட்டாளத்தை நான் பார்த்ததில்லை”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. ஆர்சிபி அணியின் தலை எழுத்தை மாற்றிய பத்திரிகையாளர்.. யார் இந்த பிரடி?
“நாம் புதிய அணியை உருவாக்கிய பொழுது, நமக்கு புதிதாக கேப்டனாக வரக்கூடிய வரை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொண்டேன். அப்போது நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னேன் அவர் நம்மை நீண்ட காலத்துக்கு வழிநடத்த போகிறார் என்று. அவர் கேப்டனாக கோப்பையை வென்று விட்டதால் நீங்கள் அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு தர வேண்டும். எங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரஜத் பட்டிதாரை வரவேற்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.