இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி கடந்த ஆண்டு தனக்கு ஏற்பட்டிருந்த பேட்டிங் சரிவில் இருந்து மீண்டு வந்தார். அதற்குப் பிறகு அவருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டெஸ்ட் மட்டும் ஒருநாள் கிரிக்கெட் சதங்கள் வந்திருக்கின்றன.
விராட் கோலி பழைய விராட் கோலியாக வந்துவிட்டாரா? என்றால் ஆமாம் என்றும், இல்லை என்றும் பதில் சொல்லக்கூடிய இருகுழுவாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய பேட்டிங் சராசரி தற்சமயத்தில் நன்றாகவே இருந்து வருகிறது.
ஆனால் அவர் தன்னுடைய பேட்டிங் சரிவுக்கு முன்பு, அசாதாரண முறையில் பேட்டிங் செய்து வந்த காரணத்தினால், தற்பொழுது அவருடைய நல்ல பேட்டிங் சராசரி கூட ரசிகர்களுக்கு கொஞ்சம் குறைவாக தெரிகிறது.
மேலும் இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் வலதுகை மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களிடம் விராட் கோலிக்கு ஒரு பலவீனம் இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதுவரை அவர் தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் கேரியரில் 22 முறை இடதுகை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டை கொடுத்து இருக்கிறார். ஆனால் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய சராசரி 63 எனவும், ஸ்ட்ரைக் ரேட் 90 எனவும் மிகச் சிறப்பாக இருக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா கூறுகையில் ” பாருங்கள், இது அந்தந்த நாளை பொறுத்ததுதான். அப்படி இடதுகை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பிரச்சனை இருந்தால், ஒவ்வொரு போட்டியிலும் அப்படியான யாரிடமாவது விக்கெட்டை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு அணியிலும் அப்படியான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர் நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இடதுகை சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக அடித்த ஷார்ட் அவருடைய ஸ்கோரிங் ஷாட் ஆகும். பந்து ஆடுகளத்தில் இருந்து கொஞ்சம் தாமதமாக வந்ததால் அவர் ஆட்டம் இழந்தார். இல்லையென்றால் அது பொதுவாக ஸ்கொயர் லெக், மிட் விக்கெட் திசையில் போகும்.
இடதுகை சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக அவருக்கு பிரச்சனை இருக்கிறது என்றால், அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் 47 சதங்கள் அடித்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை!” என்று கூறியிருக்கிறார்!
இந்திய அணி ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்றில், தன்னுடைய கடைசிப் போட்டியை நாளை மறுநாள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி விளையாடுவதாக இருந்தால், அவர் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் சகிப் அல் ஹசனை எப்படி எதிர்கொள்வார்? என்பது சுவாரசியமான ஒன்றாக அமையும்!






