இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் அறிமுக வீரராக ரியான் பராக் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
அறிமுக வீரர் ரியான் பராக்கிற்கு இந்திய ஜாம்பவான் வீரரான விராட் கோலி இந்திய அணியின் தொப்பியை வழங்கி வரவேற்றதுடன் சில முக்கிய கருத்துகளையும் கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் சுழற் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தை உணர்ந்த இந்திய அணி மூன்றாவது போட்டிக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்து சுழற்பந்து பேட்ஸ்மேன் ஆன ரியான் பராக்கை இந்திய அணியில் இணைத்துள்ளது.
ரியான் பராக் இந்திய அணிக்கு ஒரு நாள் தொடரில் 256 ஆவது வீரராக அறிமுகம் ஆகிறார். ஏற்கனவே டி20 தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய ரியான் பராக் தற்போது ஒரு நாள் தொடரிலும் அடி எடுத்து வைக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய ஜாம்பவான் விராட் கோலி அறிமுக வீரருக்கான தொப்பியை கொடுத்து சில முக்கிய கருத்துகளையும் கூறி இருக்கிறார்.
ரியான் பராக் குறித்து விராட் கோலி விரிவாக கூறும்போது “ரியான் முதலில் இந்திய அணிக்காக ஒரு நாள் தொடரில் விளையாடப் போவதற்கு எனது வாழ்த்துக்கள். இன்றைய கிரிக்கெட்டில் உங்களை தேர்ந்தெடுத்த பொறுப்பாளர்கள் பார்த்துக் கொண்டிருப்பதையும், உங்களிடம் ஸ்பெஷலான ஒன்றை காண்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். மேலும் கௌதம் கம்பீர் பாய், ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் என அனைவரிடமும் நான் பேசிய போது, அவர்கள் உங்களிடம் ஸ்பெஷலான விஷயத்தை கவனிக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவின் மேட்ச் வின்னர் ஆகக்கூடிய திறமையை உங்களிடத்தில் உள்ளது. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் இப்போது உங்களை கொஞ்ச காலமாக அறிகிறேன். மேலும் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் சமயத்தில் உங்களது சிறப்பான பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மூலம் காலடி எடுத்து வைக்க இதை விட சிறந்த தருணம் அமையாது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் 2024: பைனலில் நீரஜ் சோப்ரா.. இறுதிபோட்டி எப்போது.. எந்த சேனல்.. முழு விபரம்
ஒரு நாள் தொடரில் 256 ஆவது வீரராக அடி எடுத்து வைப்பதற்கு எனது வாழ்த்துக்கள்” என்று விராட் கோலி கூறி இருக்கிறார். இன்றைய போட்டியில் பந்து வீசிய ரியான் பராக் ஒன்பது ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது.