18 வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் லீக் தொடரின் 20 ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி விளையாடுகின்றன. மும்பையில் உள்ள வான்டே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய விராட் கோலி மற்றும் பில் சால்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை விளையாட ஆரம்பித்தார்கள்.
இதில் பில் சால்ட் 4 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த போது போல்ட் பந்துவீச்சில் ஸ்டம்ப்புகள் சிதற ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு படிக்கல் உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்க ஆரம்பித்தார். போல்டின் மூன்றாவது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்த விராட் கோலி 18 ரன்களில் இருந்த போது டி20 கிரிக்கெட்டில் ஒரு மகத்தான சாதனை ஒன்றை படைத்தார்.
தனது 18வது ரன்னில் இருந்தபோது டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதுவரை 386 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்திய ஐந்தாவது வீரராக மாறினார். மேலும் இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறஸ் கெயில் 381 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஃப்ரெண்ட்ஸ் இதை செய்ய சொல்லி கூப்பிடுவாங்க.. ஆனா என் அப்பாவுக்கு பயந்து போக மாட்டேன்.. குழந்தைப் பருவம் குறித்து தோனி
இதில் மற்றொரு சுவாரசிய விஷயமாக இதுவரை டி20 போட்டிகளில் விளையாடி ரோஹித் சர்மா 11,851 ரன்கள் வைத்திருக்கும் நிலையில் அவரை ஏற்கனவே கடந்த விராட் கோலி 13000 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஜாம்பவான்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். மேலும் 13 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் இந்திய வீரராகவும் விராட் கோலி இருக்கிறார். தற்போது விளையாடி வரும் பெங்களூர் அணி 9 ஓவர்கள் முடிவில் 95 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியில் போல்ட் மற்றும் விக்னேஷ் புத்தூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்