வீடியோ; டிஎன்பிஎல் 2023 இரண்டு கைகளிலும் பந்துவீசி அசத்தும் 22 வயது இளம் வீரர்!

0
2354
Tnpl2023

ஏழாவது டிஎன்பிஎல் டி20 லீக் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து ஐபிஎல் தொடருக்கும், இந்திய அணிக்கும் வீரர்களைக் கண்டறிவதற்கான சிறந்த களமாக டிஎன்பிஎல் டி20 தொடர் இருக்கிறது.

இந்த டிஎன்பிஎல் தொடரில் இருந்துதான் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் ஐபிஎல் தொடருக்கும் அங்கிருந்து இந்திய அணிக்கும் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்று ஏழாவது டிஎன்பிஎல் டி20 தொடரில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியும், சேலம் ஸ்பார்டான்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதென தீர்மானித்துக் களமிறங்கியது. அந்த அணிக்குத் துவக்க ஆட்டக்காரர்களான பிரதோஷ் ரஞ்சன் பால் மற்றும் ஜெகதீசன் இருவரும் அதிரடியான மிகச்சிறப்பான துவக்கம் தந்தார்கள்.

ஒன்பது ஓவர்களின் முடிவில் அந்த அணி 91 ரன்கள் எடுத்து மிகவும் வலிமையான அடித்தளத்தைப் பெற்றிருந்தது. இந்த நேரத்தில் பந்து வீச வந்த சேலம் அணியின் மோகித் ஹரிஹரன் சிறப்பாக விளையாடி வந்த ஜெகதீசனை கிளீன் போல்ட் செய்து அசத்தினார்.

- Advertisement -

வலது கை ஆட்டக்காரரான ஜெகதீசனுக்கு இடது கையில் பந்து வீசிய மோகித் ஹரிஹரன், இடது கை வீரரான பிரதோஷ் ரஞ்சன் பாலுக்கு வலது கையில் பந்துவீசி ஆச்சரியப்படுத்தினார். இதற்கான வீடியோ இணைப்பு கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கிறது!

இரு கைகளாலும் மிகச்சிறப்பாக சுழற்பந்து வீசக்கூடிய அரிதான வீரர்களில் ஒருவராக மோகித் ஹரிஹரன் காணப்படுகிறார். நேற்றைய போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுத் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

இதில் மேலும் மிகக்குறிப்பாக இவர் ஆல்ரவுண்டர் என்பதுதான். பேட்டிங்கிலும் நான்காம் இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடக்கூடியவர். இதற்கு முன்பு அரைசதங்கள் எல்லாம் விளாசி இருக்கிறார்.

தற்பொழுது 22 வயதாகும் இவர் 2018 ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎல் தொடரில் விளையாடுகிறார். திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சி வீரன்ஸ், திருச்சி ரூபி வாரியர்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ள இவர், தற்பொழுது சேலம் ஸ்பார்டான்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

மாறிவரும் கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவம் மிகவும் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்த வடிவத்தில் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது. மோஹித் ஹரிஹரன் போல இரண்டு கைகளிலும் பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய இடம் காத்திருக்கும். இவர் தன் திறமையை மெருகேற்றி தன்னை நிரூபிக்கும் பொழுது ஐபிஎல் தொடரில் இவருக்கான வாய்ப்பு அடுத்த வருடமே கிடைக்கலாம்!