வீடியோ.. 28 பந்து.. 76 ரன்.. சூப்பர் கிங்ஸ் வீரர் சரவெடி.. அமெரிக்காவுக்கு விளையாடும் இந்தியர்!

0
1689
Milind kumar

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் முடிந்து, தற்பொழுது மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் எட்டாம் தேதி துவங்கிய இந்த தொடர் ஆகஸ்ட் 15ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெறுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் அரையிறுதிக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பிளே ஆப் சுற்றுகள் ஐபிஎல் போல நடத்தப்படுகின்றன.

- Advertisement -

இந்த ஆறு அணிகளில் நான்கு அணிகளுக்கு சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, ஹர்பஜன் சிங் ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நேற்று சுரேஷ் ரெய்னா தலைமையிலான கலிபோர்னியா நைட்ஸ் அணியும், பென் டக் தலைமையிலான டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கலிபோர்னியா நைட்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த சர்வதேச முன்னாள் வீரர் பின்ச் ரன் எடுக்காமல் வெளியேறினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த 47 வயதான தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் லெஜன்ட் வீரர் காலிஸ் மற்றும் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி தற்போது அமெரிக்காவுக்காக விளையாடும் மிலிந்த் குமார் இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள்.

- Advertisement -

ஜாக் காலிஸ் மிகச்சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் குவித்து பிரமிப்பை ஏற்படுத்தினார்.

அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மிலிந்த் குமார் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் அரை சதம் அடித்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 28 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் குவித்தார். பத்து ஓவர்கள் முடிவில் கலிபோர்னியா நைட்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய பென் டக் தலைமையிலான டெக்ஸாஸ் சார்ஜஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே சேர்த்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான அணி முதல் வெற்றியை பதிவு செய்தது!