18வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து அணிகளை திறமையாக கட்டமைத்தது.
இந்த சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரரான வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
23.75 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்றுக் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை அணியிலிருந்து கழட்டி விட்டது. இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வீரராக கருதப்படும் வெங்கடேஷ் ஐயர் கடந்த சில ஆண்டுகளாக கேகேஆர் அணிக்காக சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். சிறந்த வீரரை வெளியிட விரும்பாத கொல்கத்தா அணி திரும்பவும் ஏலத்தில் போட்டியிட்டு 23.75 திரும்பவும் வாங்கியது.
எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு கொல்கத்தா அணியின் கேப்டன் யார் என்ற கருத்துக்கள் பரவி வரும் நிலையில் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட ரகானே கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் வெங்கடேஷ் ஐயர் கேப்டன் பதவியை தனக்கு வழங்கினால் சிறப்பாக செயல்பட ஆர்வமாக இருப்பதாக விருப்பம் தெரிவித்து இருக்கிறார். மத்திய பிரதேச ஆல்ரவுண்டர் வீரரான இவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் கேகேஆர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் எப்போதும் கூறுவது இதைத்தான்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “மத்திய பிரதேசம், ஐபிஎல் அல்லது இந்திய அணி என எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் நான் அதில் தலைவனாக இருக்க வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். ஒரு தலைவனாக இருப்பதால் யோசனைகளோடு சில பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள்.
இதையும் படிங்க:கோலிக்கு என்ன மரியாதையோ அதை அவருக்கும் தரனும்.. சிறந்த டாப் 4ல் நிச்சயம் இருப்பார் – கபில் தேவ் கருத்து
அதற்கு கேப்டன் பதவி உண்மையில் தேவையில்லை என்றாலும் டிரெஸ்ஸிங் ரூமில் நான் ஒரு தலைவனாக இருக்க விரும்புகிறேன். கேப்டன் பதவி எனக்கு கிடைத்தால் அத்தகைய புகழ்பெற்ற உரிமையை வழி நடத்துவது எனக்கு மிகவும் பெருமையாகும். எனவே இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.இளம் வீரரான வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா நிர்வாகம் கேப்டனாக நியமிக்குமா அல்லது சீனியர் வீரர்களான ரசல் அல்லது ரகானே ஆகியோரில் ஒருவரை கேப்டனாக அறிவிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.