இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் முக்கிய காரணமாக அமைந்த இந்திய அணி வீரர் வருண் சக்கரவர்த்தி போட்டி குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து முதல் டி20
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாசை இழந்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் குறிப்பாக இங்கிலாந்து அணியின் மூன்றாவது விக்கெட்டுக்கு பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் கூட்டணி 28 பந்துகளுக்கு 48 ரன்கள் எடுத்த நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க அந்த பார்ட்னர்ஷிப்பை தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி உடைத்தார்.
68 ரன்கள் எடுத்திருந்த ஜாஸ் பட்லரின் விக்கட்டை உடைத்த வருண், அதற்குப் பிறகு ஹாரி ப்ரூக் மற்றும் லிவிங்ஸ்டன் என அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் சரிவுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி குவித்த 132 ரன்கள் இலக்கை இந்திய அணி 12.5 ஓவரில் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் மூலம் பார்த்து பழகி விட்டேன்
இந்த வெற்றிக்குப் பிறகு வருண் சக்கரவர்த்தி கூறும் போது ” ஐபிஎல் தொடரில் விளையாடி இப்படிப்பட்ட ஆடுகளத்தை பார்த்து பழகி விட்டேன். இந்த ஆடுகளத்தில் எனக்கு நீளம் நல்ல உதவியாக இருக்கும் என்பது நன்றாக தெரியும். எனவே அதனை நான் விலக்கி வைக்க முயற்சி செய்கிறேன். இந்த மைதானத்தில் ஒவ்வொரு ஓவர் வீசுவதும் சவாலானது. மேலும் குறிப்பாக கடைசி ஓவர் வீசுவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.
இதையும் படிங்க:நான் 2 பேர குறிப்பிட்டு சொல்லணும்.. என் அதிரடிக்கு அவங்க தந்த ஆதரவுதான் காரணம் – அபிஷேக் ஷர்மா பேட்டி
ஆனால் கடவுளின் ஆசிர்வாதத்தின் மூலமாக நான் வெற்றி பெற்றேன். நான் வீசுகிற சைடு ஸ்பின் பந்துகள் மூலமாக பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாது என்று தெரியும். எனவே இவர்களை வீழ்த்த பவுன்ஸ் பந்துகளை பயன்படுத்தினேன். அது எனக்கு நன்றாக உதவியது. நான் இன்னும் எனது பந்துவீச்சில் 10 க்கு 7 மதிப்பெண்களில் தான் இருக்கிறேன். நான் இன்னும் எனது பந்துவீச்சில் வேலை செய்ய வேண்டும்” என்று சக்கரவர்த்தி கூறியிருக்கிறார். முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டி வருகிற சனிக்கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.