இந்திய அணி மீது வைக்கப்படும் வீண் விமர்சனங்களும்.. ரிக்கி பாண்டிங் ஸ்ப்ரிங் பேட்டுக்கு உடனான தொடர்பும்!

0
2449
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக பத்து வெற்றிகளை பெற்று இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

2003 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கங்குலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றிருந்தது. இதே போல் 2015 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் 7 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று இருந்தது. இதையெல்லாம் தற்பொழுது கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முறியடித்திருக்கிறது.

- Advertisement -

மேலும் தற்போதைய இந்திய அணி 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா அணியை போலவே செயல்பட்டு வருகிறது. வீழ்த்த முடியாத பெரும் பலத்தோடு, ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு வீரர்கள் உள்ளே நுழைந்து சாதிக்கும் அளவுக்கு அணி நிலைமை இருக்கிறது.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் பேட்டிங்கில் மூன்று நிலைகளுக்கும் சரியான பேட்ஸ்மேன்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவரவர் வரும் இடத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள். அதேபோல் பௌலிங் யூனிட்டில் வேகம் மற்றும் சுழல் என ஐவரும் உலகத்தரமானவர்கள். இப்படியான ஒரு அணி இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் அமையுமா என்பது கூட சந்தேகம்தான்.

- Advertisement -

இதன் காரணமாகவே இந்திய அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆசியக் கோப்பை தொடரிலேயே இந்திய அணியின் செயல்பாடு முக்கிய வீரர்கள் அனைவரும் அணிக்கு வந்ததும் சிறப்பாக மாறிவிட்டது என்பது தான் உண்மை.

உண்மை நிலவரம் இப்படி இருக்கும் பொழுது, இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர், இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி கட்டுப்படுத்தி மோசடியான காரியங்களில் ஈடுபட்டு இந்திய அணியை வெற்றி பெற வைக்கிறது என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள்.

இந்திய வீரர்களுக்கு தனியான பந்து தரப்படுகிறது, டாஸ் போடப்படும் பொழுது ரோகித் சர்மா நாணயத்தை தூரமாக எறிகிறார், டிஆர்எஸ் விதியை அவர்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டார்கள், நடுவர்களை கைக்குள் வைத்திருக்கிறார்கள், ஆடுகளத்தை மாற்றிக் கொள்கிறார்கள், இப்படி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் வெளியில் இருக்கக்கூடிய சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வைத்தாலும் பரவாயில்லை. அவர்களைத் தாண்டி சில கிரிக்கெட் நாடுகளின் முன்னாள் வீரர்கள் பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள். இதற்கான கண்டனத்தை அந்தந்த நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் பதிவு செய்யவும் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2003 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் அடித்து நொறுக்கிய பொழுது, அவருடைய பேட்டில் ஸ்ப்ரிங் இருந்தது என்று விவரம் அறியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பேசியது போல, தற்பொழுது சில நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாடிய முன்னாள் வீரர்களே பேசுவதுதான் வேடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது!

அந்தச் சமயத்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வியை, ஆஸ்திரேலிய அணிப்பெற்ற பிரம்மாண்ட வெற்றியை, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எனவே ஆஸ்திரேலியா அணி மோசடி செய்து வெற்றி பெற்றது, ரிக்கி பாண்டிங் பேட்டில் ஸ்ப்ரிங் இருந்தது போன்ற அபத்தமான கற்பனையான குற்றச்சாட்டுகளை பரவலாக பேசி வந்தார்கள். இதற்காக மீண்டும் மறு ஆட்டம் நடத்தப்படும் என்பதாக கூட வதந்திகள் பரப்பப்பட்டது.

தற்பொழுது இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில், இந்திய அணி மீது வைக்கப்படும் கற்பனையான அபாண்டமான குற்றச்சாட்டுகள் எல்லாமே, இந்த மனித உளவியலின் அடிப்படையில்தான் வைக்கப்பட்டு கொண்டு வருகின்றன.

ஒரு சிறு வித்தியாசம் என்னவென்றால், இந்திய தரப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் வைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது சில வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களால் வைக்கப்படுகிறது என்பதுதான்!

- Advertisement -