நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பக்கம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இருந்தார். அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக வருவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள்!
இந்த நிலையில் அவர் எதிர்பாராத விதமாக சென்னை பயிற்சியில் இருந்தபோது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடப்பு உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் முதல் போட்டியில் இடம் பெறவில்லை.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் தரப்பில் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்று கடைசி நேரத்தில்தான் முடிவு செய்வோம் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக அவரது உடல்நிலை குறித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொஞ்சம் இருந்தது.
ஆனால் தற்போது கிடைக்கின்ற செய்திகளின்படி அவர் நீண்ட நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. குறைந்தபட்சம் 10 நாட்கள் கூட ஓய்வில் இருக்க வேண்டிய நிலைமை வரலாம். டெங்கு பாதிப்பு அப்படியான ஓய்வு கொடுத்தால் மட்டுமே சரியாக கூடிய ஒன்று என்று மருத்துவ தரப்பில் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறப்படும் பொழுது “அக்டோபர் ஒன்பதாம் தேதி டெல்லிக்கு இந்திய அணியுடன் கில் பயணம் செய்ய மாட்டார். அவர் டெல்லியில் 11ஆம் தேதி நடக்க இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அவர் சென்னையில் தங்கி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார்.
இந்த நிலையில் இருந்து அவர் எப்போது திரும்பி வருவார் என்கின்ற உறுதியான தேதியை சொல்வது கடினமானது. டெங்கு உடலில் இருந்து அதிக சக்தியை உறிஞ்சுகிறது. இதன் காரணமாகவே குளுக்கோஸ் மூலம் அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவர்கள் நீரேற்றம் செய்து வருகிறார்கள். அடுத்த கட்டமாக அவரது தீவிர உடல்நிலை செயல்பாடு எப்படி இருக்கிறது? என்று பார்க்க வேண்டும்.
தற்போதைக்கு அவருக்கு பதிலாக மாற்று யாரையும் கொண்டு வரும் யோசனை கிடையாது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் குணமடைவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் சரியானதாக தகவல் கிடைத்ததும் அவர் எவ்வாறு இருக்கிறார் என்று நாங்கள் பார்ப்போம். இன்னும் சில காலம் அவரை கண்காணிப்போம். மாற்றுக் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றால் ரோகித், ராகுல் ஆகியோர் அஜித் அகர்கர் உடன் தொடர்பில் இருக்கிறார்கள் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது!