தற்போது நடைபெற்று வரும் டிஎன்பிஎல் எட்டாவது சீசனில் இன்றைய போட்டியில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி அணி பேட்டிங் மற்றும் பவுலிங் அதிரடியாக செயல்பட்டு மதுரை அணியை சுருட்டி வென்றது.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மதுரை அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அவரது இந்த முடிவு அவரது அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியது. திருச்சி அணி தனது துவக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி விக்கெட்டை ஒரு ரன்னில் இழந்தது. ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியில் மிரட்டினார்கள்.
திருச்சி அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் வாசிம் அஹமத் 55 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் உடன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 90 ரன்கள் குவித்தார். நான்காவது இடத்தில் வந்த அதிரடி வீரர் சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 60 ரன்கள் குவித்தார்.
திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. மதுரை அணியில் அனுபவ பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின் இருந்த பொழுதும் அவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 38 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணியை திருச்சி அணி பந்துவீச்சில் மிரட்டியது. மதுரை அணியின் கேப்டன் முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஹரி நிஷாந்த் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 20 பந்துகளில் 39 ரன்கள் அதிரடியாக எடுத்தார். இவருக்கு அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு சிறந்த தாக்கத்தை உண்டாக்கிய ஸ்வப்னில் சிங் 18 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: வெறும் 11 ஓவர்.. 10 விக்கெட்.. ஸ்மிருதி பூஜா அசத்தல் ஆட்டம்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி
இறுதியாக மதுரை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. மதுரை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கலக்கிய சஞ்சய் யாதவ் மற்றும் ராஜ்குமார் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.






