முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்தும், இந்தியாவின் போராட்டம் வீண்.. முதல் வெற்றியை ஸ்டைலாக பெற்றது ஆஸ்திரேலியா!

0
370

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் சிக்கி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குன்னமென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் அடித்தார்.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு, கவாஜா 60 ரன்கள், லபுஜானே 31 ரன்கள் அடிக்க 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, மீண்டும் ஒருமுறை ஆஸி., சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியில் இந்திய அணியால் 75 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு, அதிகபட்சமாக புஜாரா 59 ரன்கள் அடித்திருந்தார். நேதன் லயன் 64 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி பல்வேறு சாதனைகளையும் படைத்தார். இது இவற்சது 2வது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு ஆகும்.

76 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்கிற முனைப்பில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் ஓவரிலேயே கவஜா விக்கெட்டை அஸ்வின் இடம் இழந்தது. இதனால் இந்திய அணிக்கு நம்பிக்கையும் கிடைத்தது.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஜானே இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் கனவை தகர்த்தனர். அஸ்வின் மற்றும் ஜடேஜா இரண்டு சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டு சீரான இடைவெளிகளில் பௌண்டரிகளை அடித்தனர். இதனால் அவர்களுக்கு அழுத்தம் முற்றிலுமாக குறைந்தது.

19ஆவது ஓவரில் டிராவிஸ் ஹெட் பவுண்டரி அடித்து 76 ரன்கள் இலக்கை கடக்க, ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடர் தற்போது 2-1 என இருக்கிறது. இறுதிவரை களத்தில் நின்று போராடிய டிராவிஸ் ஹெட் 49 ரன்களும், லபுஜானே 28 ரன்களும் அடித்திருந்தனர்.

முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய நேதன் லயன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.