18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ரவுண்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அடுத்தடுத்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ – ஐதராபாத் அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை விளாசியது.
டிராவிஸ் ஹெட்டின் இமாலய சிக்ஸ்
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த இஷான் கிஷன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். ஆனால் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 28 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருந்தாலும் டிராவிஸ் ஹெட் அடித்த ஒரு சிக்ஸ் இமாலய உயரம் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அந்த சிக்ஸ் மொத்தமாக 105 மீட்டர்கள் உயரப் பறந்தது. இதன் மூலமாக நடப்பு ஐபிஎல் தொடரில் நீண்ட தூரம் சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளார். தற்போது வரை நடந்துள்ள போட்டிகளில் 105 மீட்டர் சிக்சருடன் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 98 மீட்டர் சிக்சருடன் 2வது இடத்தில், குஜராத் அணிக்காக ஆடிய ரூதர்ஃபோர்ட் 97 மீட்டர் சிக்சருடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
சிஎஸ்கே அணியில் யார்?
அதேபோல் சாய் சுதர்சன் அடித்த சிக்ஸ் 95 மீட்டர் வரை சென்று விழுந்தது. அதேபோல் ஒட்டுமொத்தமாக அணிகளின் சார்பாக நீண்ட தூரம் சிக்ஸ் அடித்த வீரர்களின் பட்டியலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கேகேஆர் அணிக்காக நீண்ட தூரம் சிக்ஸ் அடித்த வீரராக ரஹானே இருக்கிறார். அவர் அடித்த சிக்ஸ் 94 மீட்டர் வரை சென்றது.
சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா அடித்த சிக்ஸ் ஒன்று 85 மீட்டர் வரை சென்று விழுந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ரியான் பராக் 90 மீட்டர் வரை சென்றது. அந்த அணிக்காக அவர்தான் நீண்ட தூரம் சிக்சரை விளாசி இருக்கிறார். ஐதராபாத் அணிக்காக டிராவிஸ் ஹெட், டெல்லி அணிக்காக ஸ்டப்ஸ் மற்றும் குஜராத் அணிக்காக ரூதர்ஃபோர்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.






