பாகிஸ்தான் அதிபர் வரை கொண்டாடுறாங்க ஆனா சென்னையில கண்டுக்குவாங்களா?.. தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜி வருத்தம்.. இதுவரை வெளிவராத தகவல்கள்!

0
3379
Balaji

2004 ஆம் ஆண்டு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செய்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை இரு நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களாலுமே எப்பொழுதும் மறக்க முடியாது. இருநாட்டின் தரப்பிலும் நிறைய லெஜெண்ட் வீரர்கள் விளையாடிய தொடர் அது!

அந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்றது. அதேபோல டெஸ்ட் தொடரையும் வென்று ஒட்டுமொத்த சுற்றுப்பயணத்தையும் வெற்றிகரமாக மாற்றியது. இந்த வகையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது இன்னும் மறக்க முடியாத ஒரு பாகிஸ்தான் சுற்றுப்பயணம்!

- Advertisement -

அப்பொழுது அணியின் மேனேஜராக இருந்த அம்ரித் மாத்தூர் தற்பொழுது பிட்ச்சைட்; மை லைப் இன் கிரிக்கெட் என்ற பெயரில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். அதில் 2004 இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து நிறைய தகவல்களை கூறி இருக்கிறார்.

அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சில சுவாரசியமான சம்பவங்கள். “நாங்கள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முசாரப்பை சந்திப்பதற்காக இருந்தோம். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து நாங்கள் கொடுக்க வேண்டிய பரிசு பொருட்களோடு வீரர்கள் வரிசையில் இருந்தார்கள். பின்பு பாகிஸ்தான் அதிபர் வந்து ஒரு கண்ணியமான உரையாடல் எல்லோருடனும் நடைபெற்றது. சச்சின் உடன் மிக நீண்ட நேரம் கை குலுக்கி தனது உரையாடலை நடத்தினார்.

இதற்கு அடுத்து அவர் மிகவும் விரும்பி ஆச்சரியத்தோடு பேசிக் கொண்டிருந்த நபர் லட்சுமிபதி பாலாஜி. அவரை அவர் ஒரு நாட்டின் சிப்பாயாக செயல்பட்டதாக கூறினார். அவருடைய கேம் ஸ்பிரிட் அவரை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அரசியல் சார்பற்ற கலாச்சார பரிமாற்ற நிகழ்வுக்காக நாங்கள் லாகூர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்று இருந்தோம். நாங்கள் மிகவும் ஈர்க்கக்கூடிய அந்த கட்டிடத்திற்குள் உள்ளே நுழைந்த பொழுது எங்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

அங்கு எங்களைச் சுற்றி நிறைய மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் இந்திய மைதானங்களில் சச்சின் சச்சின் என்ற குரல் ஒலிப்பது போல் இல்லாமல், அங்கு மாணவர்கள் பாலாஜி பாலாஜி என்று உற்சாகமாக குரல் எழுப்பினார்கள். அந்த சத்தத்தால் அந்த மண்டபமே அதிர்ந்தது.

அங்கு மாணவர்களின் வரவேற்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த இடத்தில் டிராவிட் பேசும் பொழுது மிகுந்த மரியாதையுடனும், பாலாஜி பேசும்பொழுது மிகவும் கலகலப்பாகவும், மேலும் இர்ஃபான் பாதான் பேசும் பொழுது வேறு விதமாகவும் காணப்பட்டார்கள்.

மேலும் வாகா எல்லையில் நடந்த நிகழ்வுக்கு சென்ற பொழுது பாலாஜிக்கு மிகப்பெரிய அளவில் அங்கு பெண்களின் வரவேற்பு இருந்தது. இதற்காக அவர் மிகவும் வெட்கப்படவும் செய்தார். அதேபோல் அதிபர் முதல் பொதுமக்கள் வரை அவருக்கு அளித்த உற்சாக வரவேற்புக்குப் பிறகு, சென்னையில் இப்படி யாராவது என்னை அடையாளம் காண்பார்களா? என்று அவர் வருத்தத்துடன் என்னிடம் கேட்டார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது!