நடப்பு 18வது ஐபிஎல் சீசனுக்கு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் பெயர் இடம் பெறவில்லை. தற்போது இதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இர்பான் பதான் ஆங்கிலம் மற்றும் இந்தி கிரிக்கெட் வர்ணனையில் மிகவும் முக்கியமானவராக இருந்து வந்தார். மிகக் குறிப்பாக மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடருக்கு அவர் கட்டாயம் கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்று இருந்தார். இப்படியான நிலையில்தான் திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.
நீக்கப்பட என்ன காரணம்?
இர்பான் பதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பிட்ட இரண்டு வீரர்களை சமூக வலைதளத்தில் மிகவும் மோசமாக விமர்சித்து வந்ததாகவும், அவர் தனிப்பட்ட முறையில் இந்த மாதிரியான தாக்குதலை செய்து கொண்டிருப்பதாலும், எனவே அவர் ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இருப்பது சரிவராது என சேர்க்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயத்தில் இர்பான் பதான் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த பொழுதும் குறிப்பிட்ட இரண்டு வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அவரை தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையில் வைத்துக்கொள்ள ஐபிஎல் ஒளிபரப்பு நிறுவனம் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதற்கு இதுவரையில் இர்பான் பதனிடமிருந்து எந்த விதமான விளக்கமும் வெளிவரவில்லை.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் நடந்தது
2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது ரவீந்திர ஜடேஜா குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மிகவும் காட்டமான முறையில் விமர்சனங்கள் செய்திருந்தார். பிறகு அந்த தொடரின் மத்தியிலேயே அவர் ஒளிபரப்பு நிறுவனத்தால் கிரிக்கெட் வர்ணனை பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிஎஸ்கே டிரெயினிங் வீணா?.. நேத்து ரகானே செஞ்ச பெரிய தப்பு.. அவர் கேப்டனா கத்துக்கணும் – சுரேஷ் ரெய்னா விமர்சனம்
இது குறித்து அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியிருந்தபொழுது இது தன் கையில் இல்லாத விஷயம் என்றும், இது தன் உரிமை சார்ந்த விஷயம் இல்லை என்றும், எனவே ஒளிபரப்பு நிறுவனம் அவர்களுடைய விருப்பத்திற்கு எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வதாகவும், அப்போது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். பிறகு அவர் மீண்டும் கிரிக்கெட் வர்ணனைக்கு வந்து தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.