தற்போது நியூசிலாந்து அணிக்கு டெஸ்ட் கேப்டனாக இருந்து வந்த வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் உடனடியாக நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு டிம் சவுதி 14 போட்டிகளில் கேப்டனாக இருந்து ஆறு போட்டிகளில் வெற்றி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறார். இதில் இரண்டு போட்டிகள் டிரா ஆகி இருக்கின்றன. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக திடீரென விலகிக் கொண்டிருக்கிறார்.
கேன் வில்லியம்சன் எடுத்த முடிவு
எதிர்காலத்திற்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதற்குப் பிறகு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் டிம் சவுதியை புதிய டெஸ்ட் கேப்டனாக கொண்டு வந்தது.
இப்படியான நிலையில் இலங்கை அணிக்கு எதிராக சமீபத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளையும் நியூசிலாந்து தோற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் வருகின்ற 16ஆம் தேதி இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிம் சவுதி கேப்டன் பொறுப்பில் விலகியதற்கான காரணம்
வேகப் பந்துவீச்சாளரான டிம் சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால் பந்து வீச்சில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும், இந்திய தொடரில் பந்துவீச்சாளராக முழு கவனத்தை செலுத்த வேண்டி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும், அதே சமயத்தில் புதிய கேப்டனுக்கு எல்லா விதமான ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும், வருகின்ற இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. தோனிக்கு சம்பளம் வெறும் 4 கோடியா.. விளையாட வருவாரா? – சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்
இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டாம் லாதம் மீண்டும் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே 2020 முதல் 2022 வரை 9 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியை கேப்டனாக வழி நடத்திய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.