நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது ரீஎன்ட்ரி போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி விமர்சனங்களை சந்தித்துள்ள நிலையில், அவரைப் பற்றி நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் டிம் சௌதி பாராட்டிப் பேசி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கியுள்ள புவனேஷ்வர் குமார், பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்களிலும், பந்து ஸ்விங் ஆகாத சூழ்நிலைகளிலும் பந்துவீச திணறி வருவதுடன் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்து வீரர் டிம் சௌதி பேசும்போது “அவருடைய திறமை மற்றும் அனுபவத்தைப் பார்க்க வேண்டும், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சூழ்நிலையில் அது மிகவும் முக்கியமானதாகும். அதனால், இது ஒரு மிகவும் தகுதியான ரீகால் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக அவர் டாப் பெர்பார்மர்களில் ஒருவராக இருந்துள்ளார். அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்புவது இதுவே முதல்முறையாகும். எனவே, இந்தத் தொடரின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர் தன் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து இதுபற்றி டிம் சௌதி பேசும்போது “டிவெண்டி-வெண்டி கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்தையும் ஒரு தனிப்பட்ட யுத்தமாகத்தான் பார்க்க வேண்டும். அங்கே ஸ்விங் கிடைக்கிறது என்றால் அதை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். ஸ்விங் இல்லை என்றால் உங்களிடம் உள்ள மற்ற திறமைகளை வைத்து பந்துவீச வேண்டும். ஒருவேளை ஸ்விங் இருந்தால் விஷயங்கள் மிகவும் எளிதாகிவிடும். புவியின் அனைத்து அனுபவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு டிவெண்டி-வெண்டி போட்டியின் பல்வேறு கட்டங்களிலும் பந்துவீச முழுத் தகுதியுள்ளவராக இருக்கிறார்” என்றும் கூறி இருக்கிறார்.