ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக வளர்க்க வேண்டிய மூன்று வீரர்கள்!

0
1911
Hardik pandya

மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய அணிக்கு விராட் கோலி நல்ல கேப்டனாக கிடைத்தாலும் ஐசிசி தொடர்களில் வெற்றி கிடைக்காமல் இருந்தது ஒரு குறையாக அமைந்தது. கங்குலி- ஜெய்ஷா கூட்டணியில் விராட் கோலி உடன் உரச அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்!

இதற்கு அடுத்து ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணியில் இந்திய அணியின் வெள்ளை பந்து கிரிக்கெட் ஆட்ட அணுகுமுறை ஆக்ரோஷமாகவே மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் டி20 உலக கோப்பையில் அந்த அணுகுமுறையை துவக்க ஆட்டக்காரர்கள் கைவிட, ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி அரை இறுதிக்குள் சென்று, அரை இறுதியில் மோசமாகத் தோற்றார்கள்!

- Advertisement -

தற்பொழுது மாற்றங்களுக்காக டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டுவரப்பட்டு இருக்கிறார். ஆனால் இவரது உடல் தகுதி எப்போது பாதிப்படையும் என்று சொல்வதற்கு இல்லை. இதனால் இவருக்கு ஒரு மாற்று கைவசம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதைச் சுட்டிக்காட்டி கம்பீர் சமீபத்தில் பேசி இருந்தார். அவரது இந்த கருத்தை நம்மால் புறம் தள்ள முடியாது. இந்தக் கட்டுரை தொகுப்பில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக உருவாக்க திறமையுள்ள வீரர்கள் மூன்று பேர் யார் என்று பார்ப்போம்!

பெரெக் மன்கட் :

28 வயதான வலது கை மிதவேக பந்துவீச்சு மற்றும் வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர் சௌராஷ்டிரா அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அடிப்படை விலை 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இவரை இந்த ஆண்டு பஞ்சாப் அணி கழட்டி விட்டது. இந்த ஆண்டு நடந்த மினி ஏலத்தில் லக்னோ அணி இவரை இவரது அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியிருக்கிறது. ஹர்திக் பாண்டியா போல் பேட்டிங் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவரை தேர்ந்தெடுத்து தயார் செய்தால் எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு நல்ல ஒரு மாற்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறது!

- Advertisement -

ராஜ் பவா :

இமாச்சல் பிரதேச அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்த 20 வயதான வலது கை வேகப்பந்துவீச்சு மற்றும் இடது கை பேட்ஸ்மேனான இவரை கடந்த ஆண்டு பஞ்சாப் அணி இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக பங்குபெற்று மிகச் சிறப்பான செயல்பாட்டை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வெளிப்படுத்தி உள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இந்திய அணியில் விளையாட சரியான தகுதிகள் இருக்கக்கூடிய வீரர்!

வெங்கடேஷ்:

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஏற்கனவே இந்திய அணிக்குள் அறிமுகமான நமக்கு நன்கு தெரிந்த வீரர்தான் இவர். தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் இவரை, இந்திய அணிக்காக எந்த நேரத்திலும் தயாராக இருக்கும்படி வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஹர்திக் பாண்டியாவுக்கு ஏதாவது மாற்று தேவை என்றால் உடனடியாக கொண்டுவரக்கூடிய இடத்தில் இவர்தான் இருக்கிறார். 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நெருங்கி வரும் நேரத்தில் இவரை பாதுகாக்க வேண்டியது முக்கியமான ஒன்று!