மிரட்டும் மழை.. லபுசேன் சதம்.. 4 நாள் முடிவில் பரபரப்பான கட்டத்தில் 4வது டெஸ்ட்!

0
229
Ashes2023

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் தற்பொழுது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது!

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருந்தன. இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் மான்செஸ்டர் நகரில் நான்காவது டெஸ்ட் போட்டி துவங்கியது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி லபுசேன் மற்றும் மார்ஸ் இருவரது அரை சதங்களால் 317 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிரீஸ் வோக்ஸ் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி அதிரடியாக விளையாடி 189 ரன்கள் குவித்தார். மொயின் அலி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜானி பேர்ஸ்டோ என எல்லோரும் அரை சதங்கள் குவிக்க, இங்கிலாந்து அணி அதிரடியாக 592 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேஸில்வுட் ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தினார்.

ஆட்டத்தின் மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், உஸ்மான் கவஜா, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரையே சமன் செய்ய முடியாமல். தத்தளித்தது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியா அணியை நான்காவது நாளில் மழை வந்து காப்பாற்றியது. போட்டி மிகக் குறைவான நேரம் மட்டுமே நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் வந்து விளையாடிய லபுசேன் அபாரமாக விளையாடி 111 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

தற்போது களத்தில் மார்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் நிற்கிறார்கள். ஆஸ்திரேலியா தரப்பில் ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்யவே இன்னும் 61 ரன்கள் எடுத்தாக வேண்டும்.

இன்றைய ஐந்தாவது நாளிலும் மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய நாளில் மூன்றாவது அணியாக போட்டியில் மழையும் பங்கு பெறுவதால், ஆஸ்திரேலியா அணியின் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால், மேலும் ஆஸ்திரேலியா அணி 61 ரன்கள் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு பின்தங்கி இருப்பதால், இன்றைய ஐந்தாவது நாள் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது!