நான் 50 அடிச்சு டீம் ஜெயிக்கலன்னா என்னங்க யூஸ்.. ஷாருக் கான் முதல் பந்தே சிக்ஸ் அடிச்சதும், கண்டிப்பா முடிச்சு கொடுப்பாருன்னு நம்பிக்கை வந்துச்சு – ஆட்டநாயகன் சிக்கந்தர் ராசா பேட்டி!

0
1562

நான் ஆட்டம் இழந்தபோது, எனக்குள் இருந்த நம்பிக்கையே போய்விட்டது. அதன் பின் ஷாருக் கான் வந்து சிக்சர் அடித்தவுடன் மீண்டும் நம்பிக்கை வந்தது என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ஆட்டநாயகன் சிக்கந்தர் ராசா.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லீக் போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் கேஎல் ராகுல் 74 ரன்கள் மற்றும் கைல் மேயர்ஸ் 29 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

பின்னர் வந்தவர்கள் வரிசையாக விக்கெட்டுகள் இழக்க, தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 159/8 ரன்கள் அடித்திருந்தது லக்னோ அணி. பந்துவீச்சில் ஷாம் கர்ரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.

இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஓபனிங் மிகமோசமாக அமைந்தது. ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஷாட் 34 ரன்கள் அடித்து அவுட்டானார். ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா பொறுப்புடன் விளையாடி பேட்டிங்கில் அணியை வழிநடத்தினார். இவர் 41 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச்சென்று ஆட்டமிழந்தார். தவறான நேரத்தில் ஆட்டமிழந்து கோபமாக வெளியேறினார்.

இருப்பினும் களத்தில் இருந்த ஷாருக் கான், அணிக்காக கடைசிவரை நின்று 10 பந்துகளில் 2 சிக்சர்ஸ் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் அடித்து போட்டியை பினிஷிங் செய்தார். இதனால் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

பேட்டிங்கில் பொறுப்புடன் விளையாடி பஞ்சாப் அணிக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்தார் சிக்கந்தர் ராசா. ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். விருதைப் பெற்ற பிறகு அவர் அளித்த பேட்டியில், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்றைய ஆட்டம் எனக்கு மனநிறைவாக இருந்தது. நான் ஆட்டமிழந்த போது, முதலில் சற்று எரிச்சலுடன் வெளியேறினேன். போட்டியை முடித்துக் கொடுக்கவில்லையே, போட்டி எப்படி சென்று முடியுமோ என்று மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது. உண்மையில் ஷாருக் கானுக்கு அத்தனை பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும்.

நான் அரைசதம் அடித்திருந்தாலும் போட்டியில் என்னுடைய அணி தோல்வியை தழுவியினால் அதில் எந்த பயனும் இல்லை. ஆகையால் ஷாருக் கான் தான் வெற்றிக்கு முதல் காரணம்.

ஐபிஎல் என்பது மிகப்பெரிய தளம். இங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும். கடந்த இரண்டு போட்டிகள் எனக்கு எதிர்பார்த்த அளவிற்கு அமையாததால், இப்போட்டியில் நான் கட்டாயம் நன்றாக விளையாட வேண்டும் என்று நம்பிக்கையுடன் களமிறங்கினேன்.

நான் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழக்கையில் நம்பிக்கை சற்று குறைந்தது. அவர் உள்ளே வந்ததும் 6-8 பந்துகள் நின்றிருந்தால், ஆட்டத்தை அவரே பினிஷ் செய்து கொடுத்திருப்பார். பின்னர் ஷாருக் கான் உள்ளே வந்த முதல் பந்தை சிக்ஸர் அடித்ததும், அவர் மீது எனக்கு அதீத நம்பிக்கை வந்தது.” என்றார்.