அந்த சிக்ஸர் அடிப்பதற்கு முன் என்னோட பிளான் இது தான் – திக் திக் நிமிடங்கள் பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா!!

0
435

சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவதற்கு முன்னால் என்னிடம் இருந்த திட்டம் இதுதான் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்திருக்கிறார்.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆசிய கோப்பை தொடரில், இந்தியா பாகிஸ்தான் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு கொஞ்சம்கூட குறையே வைக்கவில்லை. ஆட்டம் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்றது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று மைதானத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பந்துவீச்சை தேர்வு செய்தார். துவக்கம் முதலே விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டே இருந்தது இந்திய அணி. நட்சத்திர வீரர் பாபர் அசம் விக்கெட்டை புவனேஸ்வர் குமார் வீழ்த்திய பிறகு சீரான இடைவெளிகளில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்து வந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிப்பதற்குள்ளாகவே அனைத்து விட்டுகளையும் அந்த அணி இழந்திருந்தது.

பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களின் 147 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் நான்கு விக்கட்டுகளும், ஹார்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளும், இளம் வீரர் அர்ஷதிப் சிங் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

சற்று சிக்கலான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் துவங்கினர். கேஎல் ராகுல் விளையாடிய முதல் பந்திலையே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் ரோஹித் சர்மாவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். சற்று பொறுப்புடன் விளையாடி விராட் கோலி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி சட்ட தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி ஐந்தாவது வைக்கெட்டிற்கு 52 ரன்கள் அடித்திருந்தது.

கடைசி ஓவரில் இந்திய அணிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் இன்னும் பரபரப்பிற்கு உள்ளாகியது. ஜடேஜா 35 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது பந்தை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டு ஒரு ரன்கள் அடித்து கொடுத்தார். மூன்றாவது பந்தை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டபோது ரன் எதுவும் அடிக்கவில்லை. கடைசி மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் சிக்சர் அடிக்க, ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பி இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 33 ரன்கள் அடித்திருந்தார். மூன்று விக்கெட்டுகள் மற்றும் 33 ரன்கள் என ஆல்ரவுண்டராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பிறகு 4வது பந்தில் சிக்ஸர் அடிப்பதற்கு முன்னர் திட்டம் எவ்வாறு இருந்தது என்பது பற்றி பேசியிருந்தார். பாண்டியா கூறியதாவது:

பவுலிங் பொறுத்தவரை, அந்த சூழலை புரிந்து கொண்டு சரியான நேரத்தில் பந்துவீச்சை கொண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே எனது திட்டம். பவுன்ஸ் மற்றும் கடினமான லென்த் இரண்டிலும் பந்து வீசுவது எனது பலமாக உள்ளது. அது மட்டுமல்லாது ஒவ்வொரு ஓவரிலும் பந்துவீச்சு குறித்த திட்டத்தை மாற்றிக் கொண்டே இருந்தேன். பேட்ஸ்மேன் என்ன தவறு செய்கிறார் என்பதை கவனித்து அதை பயன்படுத்திக் கொண்டேன். பேட்டிங்கில் கடைசி இரண்டு ஓவர்கள் மீதமிருந்தபோது ஒரு இளம் வீரர் மற்றும் ஒரு இடதுகை பந்துவீச்சாளர் இருவர் இன்னும் பந்துவீச வேண்டும் என்று எனக்கு தெரிந்துவிட்டது. ஆகையால் எனக்கு எந்தவித பதட்டமும் இல்லை. இருபதாவது ஓவர் இளம்வீரர் தான் வீச வேண்டும். அப்போது பவுலருக்குத்தான் என்னைவிட அதிக பதட்டம் இருக்கும். ஏழு ரன்கள் மட்டும் தான் தேவைப்பட்டது. எனக்கு 15 ரன்கள் இலக்காக இருந்தாலும் இந்த சூழலில் என்னால் அடித்திருக்க முடியும். ஏனெனில் பதட்டம் பந்துவீச்சாளருக்கு தான் அதிகமாக இருக்கும் என்பதை பயன்படுத்திக் கொண்டேன். 4 பந்துகளில் ஆறு ரன்கள் மட்டும் தான் தேவைப்பட்டது. எதற்காக பதட்டம்? இது போன்ற பல சூழல்களை நான் சந்தித்து இருக்கிறேன் என்பதால் சாந்தத்துடன் இருக்க முயற்சித்தேன். இதுமட்டுமே எனது திட்டம் என்றார்.