“இந்த முறை நல்ல டீமே ஜெயித்தது” – வார்னருக்கு மீண்டும் பதிலடி கொடுத்த முகமது கைப்!

0
354
Kaif

இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இந்திய முன்னாள் வீரர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கியது.

இந்தத் தொடர் முழுக்க இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வெற்றி பெற்று வந்தது. மேலும் பெற்ற வெற்றிகள் அனைத்தும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி பெற்ற வெற்றிகள். எந்த இடத்திலும் எதிரணி ஆட்டத்தில் எழுவதற்கு இந்திய அணி அனுமதிக்கவே இல்லை.

- Advertisement -

லீக் சுற்றுகள் முடிந்து அரைஇறுதியில் கூட பேட்டிங்கில் முழு ஆதிக்கம் செலுத்தி நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது. அதே சமயத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் மிகவும் வரையறுக்கப்பட்ட ஆனால் எல்லா பலங்களையும் உள்ளடக்கிய பந்துவீச்சு படையாக இருந்தது.

இதன் காரணமாகத்தான் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று இந்தியா தாண்டி பல கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்து இருந்தார்கள். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடுகளத்தின் காரணமாக தோல்வியடைய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது. பனிப்பொழிவு இருக்கின்ற நிலையில் ஆடுகளம் இரண்டு பகுதிகளிலும் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்குமாறு அமைத்திருக்க வேண்டும். இப்படி இல்லாததால் ஏற்பட்ட தோல்வி பெரிய ஏமாற்றம்.

இந்த நிலையில் இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக சிறந்த அணி தோல்வி அடைந்தது என்று முகமது கைப் அப்பொழுது கூறியிருந்தார். இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் விமர்சகர் ஒருவரால் பகிரப்பட சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளியே வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டேவிட் வார்னர் முகமது கைப்பின் பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக “அன்றைய நாளில் எது சிறந்த அணியோ அந்த அணிதான் வெல்லும். எனவே சிறந்த அணிதான் வெற்றி பெற்றது. பேப்பரில் எழுதும் பொழுது சிறந்த அணியாக மட்டும் இருந்தால் போதாது!” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வென்ற பிறகு முகமது கைஃப் கூறும் பொழுது ” சிறந்த திறமை, சிறந்த திறன்கள், இந்த முறை களத்திலும், காகிதத்திலும் சிறந்த அணியாக இருந்த அணியே வெற்றி பெற்றுள்ளது. 4-1″ என மீண்டும் டேவிட் வார்னருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்!