“இந்த காரணத்தால் தான் குல்தீப் யாதவை எடுக்கவில்லை!” – உமேஷ் யாதவ் பதில்!

0
721
Umesh

பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்றுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராகும்!

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!

- Advertisement -

இன்று மிர்பூர் நகரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் பங்களாதேஷ் கேப்டன் சகிப் அல் ஹசன் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு உனட்கட் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்த முடிவு ஆட்டம் துவங்கும் பொழுதே பெரிய விமர்சனத்தை கொண்டிருந்தது.

இன்றைய நாள் முடிவில் பங்களாதேச அணி 227 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் உமேஷ் யாதவ் நான்கு விக்கெட்டுகள் மற்றும் உனட்கட் இரண்டு விக்கெட்டுகள் என வேகபந்துவீச்சாளர்கள் ஆறு விக்கட்டுகளை வீழ்த்தினார்கள். சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்பொழுது வரை ஆட்டம் இந்திய அணியின் கையில் இருப்பதால் குல்தீப் நீக்கப்பட்ட விவகாரம் பெரிய அளவில் எதிரொலிக்காமல் இருக்கிறது!

தற்பொழுது உமேஷ் யாதவ் எந்தக் காரணத்தால் குல்தீப் யாதவை தேர்வு செய்யவில்லை என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இப்படி தனக்கும் நடந்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும் பொழுது
“இது உங்கள் கிரிக்கெட் பயணத்தின் ஒரு பகுதி. எனக்கும் இப்படி நடந்திருக்கிறது. நீங்கள் நன்றாக செயல்பட்டும். சில நேரம் வெளியில் அமர்ந்திருப்பீர்கள். காரணம் அது அணி நிர்வாகத்தின் முடிவு. ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப வந்து சிறப்பாகச் செயல்பட்டதுதான் முக்கியம்” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து கூறிய அவர்
“இது அணி நிர்வாகத்தின் முடிவு. சில நேரங்களில் நாங்கள் அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ அதனுடன்தான் போக வேண்டும். முதலில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படுகிறது, பிறகு அதற்கு ஏற்ற வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஆடுகளம் அமைந்துள்ள விதத்தைப் பொறுத்தே குல்தீப் யாதவை தேர்வு செய்யவில்லை. மேலும் இந்த ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சரிசமமாகவே இருக்கிறது. சில பந்துகள் மட்டும் ஏதாவது செய்கிறது. மற்ற பந்துகள் எல்லாம் சாதாரணமாக தான் போகிறது!” என்று தெரிவித்துள்ளார்!