இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று நடந்து முடிந்துள்ள முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 56 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரி உட்பட 89 ரன்கள் குவித்தார்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.இலங்கை அணியில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 47 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 53 ரன்கள் குவித்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் புவனேஸ்வர் குமார் மற்றும் வெங்கடேஷ் ஐயர் மிக சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இறுதியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காயம் காரணமாக களம் இறங்காத ருத்ராஜ்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் இந்திய ஓபனிங் வீரர் கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. தொடைப் பகுதியில் தசை சம்பந்தமான காயம் என்பதால் அவர் தற்பொழுது ஓய்வு எடுத்து வருகிறார். அதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி தற்பொழுது தொடங்கியுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.
அவருக்கு மாற்று வீரராக இளம் வீரர் ருத்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட இவரை களமிறக்க வைக்கவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் நிச்சயமாக இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று நடந்து முடிந்துள்ள முதல் டி20 போட்டியில் இவர் களம் இறங்கவில்லை.
வலது கை மணிக்கட்டில் சிறிய காயம் இருப்பதன் காரணமாக ருத்ராஜ் போட்டியில் பங்கேற்காத விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் அடுத்த அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவார் என்கிற நம்பிக்கையான செய்தியும் கிடைத்துள்ளது.
இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கப் போகிறது
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் பங்கேற்கப் போவதில்லை, அவர்கள் இருவருக்கும் சிறிய ஓய்வு கொடுக்க பட்டுள்ளது.இஷான் கிஷனுக்கு துணை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். அது தவிர நிறைய இளம் வீரர்கள் தற்பொழுது பட்டியலில் தயாராக இருக்கின்றனர்.
எனவே இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நிறைய இளம் வீரர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்று நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.