இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரு அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. அதனையொட்டி கவுண்டி தொடரில் விளையாடி வரும் லெய்செஸ்ட்டர்ஷிர் அணியுடன் தற்போது இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி கொண்டிருக்கிறது.
முதலில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணி இன்று முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரீகர் பரத் 70* ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்காமல் தற்பொழுது விளையாடி வருகிறார்.
இந்திய அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் விளையாட காரணம் என்ன
லெய்செஸ்ட்டர்ஷிர் அணியில் இந்திய அணி வீரர்களான ரிஷப் பண்ட் புஜாரா ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இந்திய அணி வீரர்கள் இந்திய அணியை எதிர்த்து எதற்காக விளையாட வேண்டும் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.அதற்கான விடை நமக்கு தற்போது கிடைத்துள்ளது.
லெய்செஸ்ட்டர்ஷிர் கவுண்டி கிளப் விதிமுறை மற்றும் ஒப்பந்தத்தின் படி பயிற்சி ஆட்டத்தில் எதிரணியில் இருக்கும் நான்கு வீரர்கள் இங்கு இடம் பெற்று விளையாடவேண்டும். இந்த முடிவுக்கு பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாகவே நான்கு இந்திய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.மேலும், அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும் பந்துவீச்சு பணிச்சுமையை நிர்வகிப்பதற்கும் இரண்டு அணியிலும் 11 வீரர்களுக்கு பதிலாக 13 வீரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.