” இதுதான் திட்டம்!” இரண்டாவது சதம் அடித்த சூரியகுமார் மாஸ் பேச்சு!

0
5166
Sky

டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவில் முடித்துக் கொண்டு அங்கிருந்து நேராக நியூசிலாந்து புறப்பட்டுச் சென்ற இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது!

இதில் முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். ஒருநாள் தொடருக்கு சிகர் தவன் கேப்டனாக இருக்கிறார். இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துணை கேப்டன் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி முகமது சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஸ்ரேயாஷ் ஆகியோர் இடம்பெற சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை!

இந்திய அணிக்கு பேட்டிங்கில் துவக்கம் தர விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட் மற்றும் இசான் கிசான் இருவரும் களம் இறங்கினார்கள். ரிஷப் பண்ட் ஆறு ரன்களில் வெளியேற இசான் கிசான் 36 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஷ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து களம் இறங்கிய தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தங்கள் முதல் பந்தில் ஆட்டம் இழந்ததோடு டிம் சவுதிக்கு ஹாட்ரிக் விக்கெட் தந்தார்கள்.

ஆனால் ஒருபுறம் இந்திய அணி பேட்டிங்கில் சராசரியாக விளையாடிக் கொண்டிருக்க, மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய சூரியகுமார் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அவர் ஆடுகளம் மற்றும் பந்து வீச்சாளர்கள் குறித்து எந்த அக்கறையுமே படவில்லை. 32 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் அடுத்த 16 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இத்தனைக்கும் கடைசி ஓவரில் ஒரு பந்தை கூட அவரால் சந்திக்க முடியவில்லை. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்களை 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில்128 ரண்களுக்கு சுருண்டது. வெற்றி பெற்ற இந்திய அணியில் ஆட்டநாயகன் விருது சூரிய குமாருக்கு வழங்கப்பட்டது. இது இந்த ஆண்டில் அவருக்கு ஏழாவது ஆட்டநாயகன் விருது ஆகும். ஒரு வருடத்தில் அதிக ஆட்டநாயகன் விருதை டி20 கிரிக்கெட்டில் பெற்ற சாதனையை ஜிம்பாப்வே நாட்டின் சிக்கந்தர் ராஸாவுடன் சூரியகுமார் பகிர்ந்து இருக்கிறார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் பேசும் போது ” நான் பேட்டிங் செய்ய களத்திற்குள் வரும் பொழுது திட்டம் தெளிவாக இருந்தது. திட்டம் என்னவென்றால் நாங்கள் 170 ரன்களை எடுக்க நான் இறுதிவரை களத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட திட்டத்திற்கு நீங்கள் விளையாடும் பொழுது எப்பொழுதும் நல்ல நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இங்குள்ள நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் முழுமையாக நல்ல முறையில் விளையாடியது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ” என்று சுருக்கமாகக் கூறி முடித்துக் கொண்டுள்ளார்!