இன்றைய நாளில் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை மிகவும் சுவாரசியமான ஒன்றாக மாற்றி இருக்கிறது!
டெல்லியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்துக்கு மட்டும் இல்லாமல் சொந்த நாட்டு ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இங்கிலாந்தை வீழ்த்தி இருக்கிறது!
முதலில் பேட்டிங் செய்து 284 ரன்கள் சேர்த்த ஆப்கானிஸ்தான், அடுத்து இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு சுருட்டி, 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருக்கிறது.
இன்றைய பொழுது ஆப்கானிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொண்டு வந்திருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. மேலும் தற்பொழுது அந்த நாட்டில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருந்தார்கள். இந்த வெற்றி அந்த மக்களுக்கு ஒரு சிறு ஆசுவாசத்தை கொடுப்பதாக இருக்கும்.
வெற்றிக்குப் பின் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹசமத்துல்லா ஷாகிதி “இது ஒரு பெரிய வெற்றி. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றும் எனது அணியினரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இது அடுத்த ஆட்டத்திற்கும் நம்பிக்கையை கொண்டு வரும். இந்த நேரத்தில் எங்கள் முழு நாடும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இருக்கும்.
இந்த நேரத்தில் சிறந்த தொடக்கத்தை தந்த எங்களுடைய துவக்க ஆட்டக்காரர்களுக்கு பாராட்டுக்கள் போய் சேர வேண்டும். அதே சமயத்தில் நாங்கள் சிறந்த தொடக்கத்தை பெற்று நடுவரிசையில் விக்கெட்டுகளை மீண்டும் இழந்திருக்கிறோம். இதுகுறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். நாங்கள் பெற்ற தொடக்கத்திற்கான பெருமை குர்பாஸ்க்கு சேரும்.
இன்று அறிமுகமான இக்ரம் இரண்டு ஆண்டுகளாக எங்களோடு இருக்கிறார்.அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் மீது நானும் பயிற்சியாளரும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவருடைய சிறந்த செயல்பாட்டு முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.
முஜிப் ஒரு ஆல் ரவுண்டர் என்று நான் நினைக்கிறேன். அவர் இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டார். இன்று அவர் எங்களுக்காக முக்கியமான ரன்களை எடுத்தார்.
சுழற் பந்துவீச்சாளர்கள் எங்கள் அணியில் மிகத் திறமையானவர்கள். அவர்கள் எப்படியானவர்கள் என்று உலகம் முழுவதும் தெரியும். அப்படியானவர்கள் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ரன்கள் எடுக்க வேண்டும். இன்று அவர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள் என்று நான் ஆட்டம் இழந்து வெளியே செல்லும்போது உணர்ந்தேன். மேலும் இந்த ஆடுகளத்தில் 280, 290 ரன்கள் நல்ல ரன்களாக இருக்கும் என்று நினைத்தேன்.
எங்களுக்கு நம்பிக்கையும் திறமையும் இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. மீதமுள்ள போட்டிகளை எதிர் நோக்குகிறோம். எங்களால் பாசிட்டிவாக இருக்க முடியும் என்று நம்புகிறோம். இது முதல் பெரிய வெற்றி இதுவே கடைசி வெற்றி கிடையாது என்று ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்!






