விராட் கோலி பாபர் ஆஸமை மக்கள் மறந்து விடும்படி செய்வார் இந்த இந்திய வீரர் ; பாகிஸ்தான் வீரர் புகழ்ச்சி!

0
4661
Suryakumaryadav

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. தொடரை நிர்ணயிக்கும் 3-வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இதில் தலா 5 பவுண்டரி 5 சிக்சர்கள் அடக்கம். விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார். இதில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.

- Advertisement -

கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க விராட் கோலி முதலில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். பின்பு சூரியகுமார் அதிரடியாக விளையாட ஆரம்பித்ததும் அவர் அமைதியாக அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

எதிர்முனையில் இருந்து சரியான ஒத்துழைப்பு வர ஆரம்பிக்க, உடனுக்குடன் பேட்டிங் முனைக்கு செல்ல முடிந்த காரணத்தால், தொடர்ந்து சீரான அதிரடியை தொடர சூரியகுமார் யாதவுக்கு வசதியாக இருந்தது. அவர் தனது வழக்கமான வித்தியாசமான ஷாட்களால் ஆஸ்திரேலிய பந்துவீச்சை மைதானத்தின் நான்கு புறங்களிலும் வெளுத்து வாங்கிவிட்டார்.

இந்திய அணியின் பலங்களில் ஒரு வித்தியாசமான பலத்தை கொடுக்கக் கூடியவராக தற்காலத்தில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். அவர் களத்திற்குள் வந்தாலே பந்து பவுண்டரி எல்லைகளை தரைவழியாகவும் காற்றிலும் கடக்க ஆரம்பித்துவிடுகிறது. அவர் மிகவும் எந்தவித சிரமமும் படாமல் பவுண்டரிகளை அடிக்கிறார். மேலும் மைதானத்தின் எல்லா புறங்களிலும் அடிக்கிறார். இதனால் அவருக்கு எப்படியான பந்துவீசி கட்டுப்படுத்துவது என்று பந்துவீச்சாளர்களுக்கு புரிவதில்லை.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா சூரியகுமார் யாதவின் திறமைகளை குறிப்பிட்டு, அவரை மிகவும் உச்சத்தில் வைத்து புகழ்ந்து பேசியிருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் பற்றி டேனிஷ் கனேரியா கூறியிருப்பது ” இதை நான் கொஞ்ச நாளாகவே சொல்லி வருகிறேன். சூரியகுமார் சிறந்தவர்களில் ஒருவர். அவருடைய 360 டிகிரி திறமையால் அவர் மிகவும் உயர்ந்த திறமைசாலியாக இருக்கிறார். அவர் பேட்டிங் செய்யும் விதம் அவர் தனக்குத் தானே தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வதாக இருக்கிறது. அவர் மூன்றாவது டி20 போட்டியில் ஆடிய விதம் அபாரமானது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவரைப் பற்றி கூறியுள்ள டேனிஷ் கனேரியா ” அவர் வித்தியாசமாக விளையாடுகிறார். அவர் நிச்சயம் ஒரு பெரிய வீரராக ஆகப் போகிறார். அவர் பேட்டிங் செய்யும் விதத்தால், மற்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை மக்கள் மறக்கும் படி செய்துவிடுவார். விராட் கோலி நிறைய ரன்கள் எடுப்பார். பாபர் ஆசம் மிகச் சிறப்பாக இருக்கிறார். ஆனால் சூரியகுமார் இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றுவிடுவார்” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.