“திலக் வர்மா பெருசா குறி வச்சிருக்காருங்க.. அவர் விருப்பம் இல்லாம எதையும் செய்யல” – ஆச்சரியப்படுத்தும் அவினவ் முகுந்த்!

0
2288
Tilakvarma

ஒரு காலத்தில் இந்திய அணிக்கு சரியான வீரர்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு நேர் எதிராக அதிக வீரர்கள் இருப்பதால் யாரை தேர்ந்தெடுப்பது என்கின்ற கஷ்டம் உருவாகி இருக்கிறது!

ஒரு வீரருக்கான வாய்ப்பு என்பது ஒரு இளைஞனின் வாழ்க்கை என்கின்ற காரணத்தினால், கொடுக்கப்பட்ட வாய்ப்பை நீட்டிக்க வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்திற்கு இருக்கிறது. எனவே உடனுக்குடனே எந்த வீரர்களையும் நீக்க முடிவதில்லை.

- Advertisement -

இதன் காரணமாக சரியான இளைஞர்கள் தென்பட்டாலும் கூட, ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் தங்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்களா என்று பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் சிறிது காலம் நடுவில் வீணாகிறது. தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் இதுதான் நிலைமையாக இருக்கிறது.

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்து குணமடைந்து வருகின்ற நிலையில், இந்த இடத்திற்கு அவர் முதற்கொண்டு சஞ்சு சாம்சனையும் இந்திய அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது திலக் வர்மாவும் இந்த நான்காம் இடத்திற்கான போட்டியில் இணைந்திருக்கிறார். இவர் இடது கை வீரராக இருப்பதோடு, உள்நாட்டு கிரிக்கெட்டிலும் மிடில் வரிசையில் விளையாடுகிறார். மேலும் வலதுகை பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். இதனால் ஆசிய கோப்பை தொடருக்கு யாரை விடுவது சேர்ப்பது, எடுத்துக்கொண்டு போனாலும் யாருக்கு விளையாட வாய்ப்பு தருவது என்று பெரிய குழப்பங்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழக வீரர் அபினவ் முகுந்த் கூறும் பொழுது
“திலக் வர்மாவுக்கு கொடுக்கப்பட்ட ரோலில் அவர் மிகச் சரியாக செயல்பட்டார். அது ஒரு நல்ல பார்ட்னர்சிப்பாக மாறியது. திலக் வர்மா எதையும் விருப்பமின்றி செய்யவில்லை என்று நான் உணர்கிறேன். அவர் தனது வேலையை மட்டும் சரியாக செய்தார்.

சூரியகுமார் மிகச்சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும், இவர் அடிப்பதற்கு போக வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாக அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்யவில்லை. இதனால்தான் எனக்கு அவரது முதிர்ச்சி மிகவும் பிடித்திருக்கிறது.

அவர் மைதானத்தின் எல்லா பக்கமும் ரன்னுக்காக பார்த்தார். பினிஷிங் மிகச் சிறப்பாக இருந்தது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறி ஆகும். ராபின் உத்தப்பா போன்ற ஒரு வீரரிடம் இருந்து யுவராஜ் சிங் போன்ற ஒருவர் என்ற பாராட்டை பெறுவது மிகவும் சிறப்பானது. நாங்கள் இந்தத் தொடரில் அவரைப் பார்த்த வரையில் அவர் மற்ற வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கதவையும் வேகமாக தட்டுகிறார்!” என்று கூறியிருக்கிறார்!