“வாய்ப்புதான் தர முடியும் அவங்கதான் யூஸ் பண்ணிக்கனும்” – அதிரடி வீரர் மீது டிராவிட் கோபம்!

0
979
Dravid

இந்தியாவில் இந்த ஆண்டு வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான தயாரிப்பில் இறங்கி இருக்கின்றன!

இதன் ஒரு பகுதியாக இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் வென்றும் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அதிர்ச்சிகரமாக இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்றது பெரிய விமர்சனத்தை உண்டாக்கியிருந்த நிலையில், தற்போது இந்தத் தோல்வி உலகக் கோப்பைக்கான இந்திய அணி மீது நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

முதல் போட்டியில் டாஸ் வென்று வீரர்களை பரிசோதிப்பதற்கு பேட்டிங் செய்ய முடிவெடுக்காமல் இந்திய அணி பந்து வீச சென்றது. அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்று இருந்தார்கள். இப்படியான நிலையில் தவறுகளை திருத்தி நேற்று இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்கிதான் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்திய அணியின் திட்டங்களும் செயல்பாடுகளும் இப்படி சீரற்று இருப்பது ரசிகர்களை மிகவும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. இந்திய உலகக்கோப்பை அணியில் காலியாக இருக்கும் இடங்களுக்கு இப்போது இருக்கும் வீரர்களின் நிலையை வைத்துப் பார்த்தால், யாருமே இல்லாதது போல்தான் இருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியின் தோல்விக்கு பின் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “நேர்மையாக சொல்வது என்றால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவது, எங்களுக்கு சரியான பல பதில்களை தரவில்லை. நாங்கள் பரிசோதிக்கப்பட வேண்டிய வீரர்களுக்கு எங்களால் வாய்ப்பு தர முடியவில்லை. எனவே தான் அவர்கள் நேற்றைய ஆட்டத்தில் களம் இறக்கப்படவில்லை.

இதேபோல் இந்திய தேசிய அகாடமியில் சில வீரர்கள் காயத்தில் இருந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் எங்களுக்கு தேவையான இடங்களுக்கு நாங்கள் வீரர்களை பரிசோதித்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே நாங்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க விரும்பினோம். ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் தேவைப்பட்டால் விளையாடுவார்கள்.

சூரியகுமார் மிகச்சிறந்த வீரர் அதில் எந்த சந்தேகமும் இல்லை. டி20 போட்டிகளின் சிறந்த செயல்பாட்டை அவரால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என்பதை முதலில் அவர்தான் விமர்சனத்திற்கு கொண்டு வருவார். நம்மால் வாய்ப்புகள்தான் தர முடியும் அவர்கள்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களை தேவையான இடங்களுக்கு முயற்சி செய்து பார்க்க வேண்டும். அதே சமயத்தில் விளையாட்டில் மோசமான நேரங்கள் வந்தால், நாம் அவர்களுக்கு பின்னால் இருந்து நம்பிக்கை அளிக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!