நேற்றைய ஒருநாள் மட்டும் இந்திய அணிக்கு நடப்பு உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய மோசமான நாளாக அமைந்தது. இந்திய அணியின் வழியில் எதுவுமே செல்லவில்லை.
டாஸ் தோற்றது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை உருவாக்கியது. ஆனாலும் கூட கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பான துவக்கத்தை தந்து அதை மாற்ற முயற்சி செய்தார்.
ரோஹித் சர்மாவின் அதிரடியால் கில் ஆட்டம் இழந்த போதும், ஆஸ்திரேலியா பின்னடைவுக்கு சென்றது. ஆனால் ரோகித் சர்மா விஷயத்தில் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கே அதிர்ஷ்டம் இருந்தது.
இந்தத் தொடரில் பாதிக்கு மேல் அருமையான பேட்டிங் ஃபார்ம்க்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நேற்று வந்தவுடன் வெளியேறினார். இதுதான் இந்தியாவின் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலை எதுவுமே செய்ய முடியாமல் செய்தது. ஏனென்றால் அதற்கடுத்து நம்பிக்கை கூறிய வகையில் ஆட்கள் இல்லை. மீதமிருந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் கடைசியில் விளையாட கூடியவர்கள்.
அதே சமயத்தில் இந்த ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்கி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் ஆடுகளமும் இல்லை. இதெல்லாம் சேர்ந்து இந்திய அணியை ஒட்டுமொத்தமாக முதல் பகுதியிலேயே முடக்கி போட்டது.
இரண்டாவது பகுதியில் இந்திய அணி பந்து வீச வரும்பொழுது பத்து ஓவர்களுக்கு மேல் பனி வர ஆரம்பித்துவிட்டது. பனி எப்பொழுது வந்தாலும் அது பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகத்தை உண்டாக்கும்.ஆடுகளம் எப்படி இருந்தாலும், அதை பனி பேட்டிங் செய்ய எளிமையாக மாற்றி விடும்.
நேற்று இந்தியா முதலில் பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் கடினமாக இருந்தது. இந்தியா இரண்டாவதாக பந்து வீசும் பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்ய எளிமையாக மாறியது. இதன் காரணமாக இந்திய அணியால் நேற்றைய போட்டியில் நிமிரவே முடியவில்லை.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்பொழுது “இந்திய அணி இப்பொழுதும் சிறந்த அணி. ஆனால் ஆடுகளம்தான் ஆஸ்திரேலியாவை போட்டிக்குள் கொண்டு வந்தது.
இந்தியாவின் நான்கு பந்துவீச்சாளர்களும் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் திரும்பினார்கள். இதன் காரணமாகத்தான் ராகுலும் விராட் கோலியும் அதிரடியாக விளையாட நினைக்கவில்லை. எட்டாவது இடத்தில் இருக்கும் சமியை பற்றி கவலைப்பட்டார்கள். இதெல்லாம் தான் திரும்பி வந்து இந்திய அணியை வேட்டையாடி விட்டது!” என்று கூறியிருக்கிறார்!