இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் மூன்று கேப்டன்கள் தலைமையின் கீழ் விளையாடுகிறது.
இதற்கு அறிவிக்கப்பட்ட மூன்று இந்திய அணிகளும் ஒரு சில இந்திய வீரர்களே இடம் பெற்று இருக்கிறார்கள். ருத்ராஜ், ஸ்ரேயாஸ் ஐயர் இவர்கள் மட்டுமே மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறார்கள்.
இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவர் சிறப்பாக விளையாடும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேலுக்கு தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இடம் கிடைக்கவில்லை.
மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
தற்போதைய இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிகள் அறிவிப்பில் இப்படியான நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது. வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதற்கும், மேலும் டி20 வடிவத்தில் யாரையெல்லாம் பரிசோதிக்க வேண்டுமோ எல்லோருக்கும் வாய்ப்பு தரும் பொருட்டும், இவ்வாறு செய்யப்படுவதாக தெரிகிறது.
இதில் ஜெய்ஸ்வால் பற்றி கவாஸ்கர் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான திறமை கொண்ட பையன். மேலும் அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார். அவர் இளமையாக இருக்கின்ற காரணத்தினால் எப்படி விளையாட வேண்டும் என்கின்ற கட்டுப்பாடு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் அதிரடியாக விளையாடுகிறார்.
பந்தை பார்க்கிறார் அடுத்து மிகத் தைரியமாக அடிக்கிறார். இதைத்தான் அவர் தொடர்ச்சியாக செய்கிறார் ஆனால் நன்றாக செய்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு சதம் அடித்திருக்கிறார். இந்தியாவுக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்தப் பையன் விளையாடுவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!