ஐபிஎல் தொடருக்கு என்னை சௌரவ் கங்குலி அழைத்தும் நான் செல்லாததற்கு ஒரு காரணம் இருக்கிறது – காரணத்தை விளக்கும் ரமீஸ் ராஜா

0
73

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் உலகின் எந்தவொரு மூலையில் எந்தவொரு மைதானத்தில் மோதிக் கொண்டாலும் மைதானம் இரசிகர்களால் நிரம்பியே தீரும். அந்தளவிற்கு இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளுக்கு, இரு நாட்டு கிரிக்கெட் இரசிகர்கள் தாண்டி, உலகளவில் கிரிக்கெட் இரசிகர்களிடம் வரவேற்பு உண்டு!

இப்படி இருந்தும் சில அரசியல் காரணங்களால் இரு அணிகளும், இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகின்றன. கடைசியா இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் 2012-13 டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெற்றது. இரு டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்திருந்தது. இதற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறவே இல்லை.

- Advertisement -

நிலைமை இப்படியிருக்க, பாகிஸ்தான் தரப்பிலிருந்து இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடருக்கு கோரிக்கை வைக்கப்பட்டாலும், இந்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. இரு அணிகளும் தற்போது ஆசிய கோப்பையிலும், ஐ.சி.சி நடத்தும் உலகளாவிய தொடர்களிலும் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்ற. கடைசியாக யு.ஏ.இ-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்டன. இதில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.

தற்போது இந்தச் சூழ்நிலை குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா சில முக்கியக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் “நான் கங்குலியுடன் ஒரு இடத்தில் உரையாடினேன். அவரிடம் நான் தொடர்ந்து, இரு நாட்டு கிரிக்கெட் வாரியத்திலும் முக்கிய பொறுப்பிலோ இல்லை தலைவராகவோ இரண்டு மூன்று கிரிக்கெட் வீரர்கள் இருந்தும், இதற்கு ஒரு முடிவு வரவில்லை என்றால் என்ன பயன்? என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறேன்” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கும் தனிப்பட்ட சில பிரச்சினைகள் இதில் இருக்கிறது. அவர் வெவ்வேறு இரண்டு சந்தர்ப்பங்களில் ஐ.பி.எல் தொடருக்கு என்னை அழைத்தார். ஒரு முறை துபாயில், மறுமுறை இப்போது இந்தியாவில். ஆனால் செல்வதா இல்லை வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அப்படி நான் அங்கு சென்றால் இரசிகர்கள் விரும்பமாட்டார்கள் கோபப்படுவார்கள் என்று நினைத்தேன். அது கிரிக்கெட் சார்ந்த விசயம்தான். ஆனால் சில விரிசல்கள் நிரப்பப்பட வேண்டும். இதில் கிரிக்கெட் பிரச்சினைகள் இருந்தால் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் இது அரசியல் விளையாட்டு” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -