இலங்கை சர்வதேச கிரிக்கெட்டில் 1996 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2014 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற அணியாக இருக்கிறது. ஆனால் தற்பொழுது அந்த நாட்டின் கிரிக்கெட் மிகவும் பாதிக்கப்பட்டு உலகக்கோப்பைக்கு தகுதி சுற்றும் விளையாடும் அளவுக்கு சரிந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் முன்பாக புதிய பயிற்சியாளரை கொண்டு வந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி காட்டி இருக்கிறது.
ஆசிய கண்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு அடுத்து உருவான இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிரிக்கெட்டில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய அணியாக இருக்கிறது. 90களில் இந்திய அணியை விட இலங்கை அணி சற்று உயர்வாகவே தெரிந்தது. அந்த அணி 1996 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரைக் கைப்பற்றியது.
இப்படி இருந்த இலங்கை அணி இறுதியாக அவர்களுக்கு அமைந்த லெஜெண்ட் வீரர்கள் முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கரா மற்றும் மகேல ஜெயவர்த்தனே, லசீத் மலிங்கா ஆகியோர் விடைபெற மிகவும் தடுமாறத் துவங்கி, தற்பொழுது ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி இந்த மாதம் இறுதியில் 27 ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இலங்கை அணிக்கு நீண்ட காலமாக தலைமை பயிற்சியாளராக இருந்த இங்கிலாந்தின் சில்வர் உண்டு ராஜினாமா செய்த காரணத்தினால், புதிய பயிற்சியாளரை கொண்டு வர வேண்டிய கட்டாயம் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இடைக்கால இலங்கை அணியின் பயிற்சியாளராக இலங்கை முன்னாள் சாம்பியன் வீரர் சனத் ஜெயசூர்யாவை கொண்டு வந்திருக்கிறது. இவர் இந்திய தொடருக்கு மட்டும் இல்லாமல் அடுத்து இலங்கையின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : மொக்க பிட்ச்.. அதான் ஐபிஎல் இந்திய பசங்க கலக்குறாங்க – பாகிஸ்தான் ஜுனைட் கான் விமர்சனம்
தான் விளையாடிய காலத்தில் இந்திய அணிக்கு சனத் ஜெயசூர்யா பெரிய நெருக்கடி கொடுத்தவராக இருந்தார். தற்போது அவர் மீண்டும் இலங்கை அணியின் பயிற்சியாளராக வந்திருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி உருவாகுமா? என்பது குறித்து ரசிகர்களுக்கு சுவாரசியம் ஏற்பட்டு இருக்கிறது!