எதற்காக நான் முதல் ஓவரை வீசினேன்? – திட்டத்தின் பின்னணியை சொன்ன நிதிஷ் ராணா!

0
876

இந்த சீசனில் கடந்த போட்டிக்கு முன்பு வரை முதல் ஓவரை வீசாத நிதிஷ் ராணா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஏன் முதல் ஓவரை வீசுவதற்கு திட்டமிட்டார்? இது குறித்து அவரே பதில் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. வெங்கடேஷ் ஐயர்(52) அரைசதம் அடித்து நல்ல பங்களிப்பை கொடுத்தார். நித்திஷ் ரானா 22 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

- Advertisement -

பின்னர் வந்தவர்கள் வரிசையாக விக்கெட்டுகள் இழக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர்.

150 ரன்கள் இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணிக்கு, முதல் ஓவரிலேயே 26 ரன்கள் விளாசினார் ஜெய்ஸ்வால். இந்த இடத்தில் இருந்தே கொல்கத்தா அணியின் சரிவு துவங்கியது. அதில் இருந்து கடைசி வரை மீளமுடியவில்லை.

இந்த சீசனில் இதுவரை காணாத வகையில், நித்திஷ் ரானா முதல் ஓவரை வீசினார். இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இந்த திட்டம் கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமையவில்லை. அதன் பிறகும் நிறுத்தாத ஜெய்ஸ்வால், ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் வரை அதிரடியிலேயே இருந்தார்.

- Advertisement -

13.1 ஓவர்களில் 151 ரன்கள் அடித்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்கள் அடித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார்.

போட்டி முடிந்த பிறகு முதல் ஓவர் வீசியதை பற்றி பேசிய நித்திஷ் ரானா, “இது சீசன் முழுவதுமே ஜெய்ஸ்வால் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். பல அணிகளின் முன்னணி பந்துவீச்சாளர்களை திணறடித்திருக்கிறார். ஆகையால் அவர் எதிர்கொள்ளாத பந்துவீச்சாளருக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். பயிற்சியாளர்கள் மற்றும் அணியினர் மத்தியில் முடிவெடுத்தோம். ஜெய்ஸ்வால் ஆடிய ஆட்டத்திற்கு எந்த திட்டமும் எடுபடவில்லை.

ஜெய்ஸ்வால் ஆடிய விதத்திற்கு அவரை பாராட்ட வேண்டும். இன்று நினைத்ததை எல்லாம் செய்யும் நாள் அவருக்கு. இந்த மைதானத்தில் 180 ரன்கள் குறைந்தபட்சம் அடித்திருக்க வேண்டும் என்று டாஸ் போடும்போது கூறினேன். எங்களது பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படவில்லை. இந்த இடத்தில் தான் இரண்டு புள்ளிகள் தவறவிட்டோம்.” என்றார்.