தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில் அசாம் மற்றும் சர்வீசஸ் அணிகள் மோதிய போட்டி 90 ஓவர்களில் முடிவடைந்து புதிய மோசமான சாதனையை படைத்திருக்கிறது.
2025/26 ஆண்டுக்கான ரஞ்சி தொடரின் இரண்டாவது போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ரியான் பராக் கேப்டனாக செயல்படும் அசாம் அணி சர்வீசஸ் அணியிடம் படுதோல்வி அடைந்ததுடன் மோசமான சாதனையையும் உண்டாக்கி இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. கேப்டன் ரியான் பராக் 36 ரன்கள் எடுத்தார். அந்த அணி 17.2 ஓவர்கள் விளையாடியிருந்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய சர்வீசஸ் அணி 5 ரன்கள் முன்னிலை பெற்று 108 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த அணி மொத்தமாக 29.2 ஓவர்கள் விளையாடியது. இரண்டு அணிகளும் மொத்தமாக தங்களின் முதல் இன்னிங்சில் 46.4 ஓவர்கள் விளையாடின.
இதற்கு அடுத்து விளையாடிய அசாம் அணி 29.3 ஓவரில் 75 ரன் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து 73 இலக்கை நோக்கி விளையாடிய சர்வீசஸ் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் மொத்தமாக 43.2 ஓவர்கள் நடைபெற்றது. மொத்தமாக எல்லாவற்றையும் கூட்டிப் பார்க்கும்பொழுது மிகச் சரியாக 90 ஓவர்கள் அதாவது 540 பந்துகளில் ஒரு டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துவிட்டது.
இதையும் படிங்க : ஹர்சித் ராணா இனி இந்திய அணியின் முக்கிய பவுலர்.. இனி வித்தியாசத்தை ஏற்படுத்துவார்.. வருண் அரோன்
இதற்கு முன்பு ரஞ்சி தொடரில் 1962ஆம் ஆண்டு டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டி மொத்தம் 547 பந்துகள் நடைபெற்று இருந்தது. தற்போது அசாம் மற்றும் சர்வீசஸ் அணி போட்டி 540 பந்துகள் மட்டுமே நடைபெற்று இருக்கிறது. குறைந்த பந்துகளில் முடிந்த ரஞ்சி போட்டியாக 62 வருட மோசமான சாதனை தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.