2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் எப்படி நடைபெறும்? இந்தியா கலந்து கொள்ளுமா என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அரசியல் காரணங்களால் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் தொடர்கள் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. ஐசிசி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடுகின்றன. தற்பொழுது ஐசிசி தொடரிலும் இந்தியா பாதுகாப்பு காரணம் காட்டி பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கிறது.
ஐசிசி மூலம் செக் வைக்கும் இந்தியா
இந்தியா பாகிஸ்தான் அணிகள் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் தொடர்கள் விளையாட விட்டாலும், இந்தியாவில் நடைபெற்ற இரண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி வந்திருக்கிறது. தற்பொழுது இந்திய அணி ஐசிசி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல மறுக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக இருந்து ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்று இருக்கிறார். இதன் காரணமாக அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை இந்தியா தடுக்கிறது என பாகிஸ்தான் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் உண்மையாகவே இந்தியா அணிக்கு பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் மரியாதையே முதன்மையானது
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி கூறும் பொழுது “இந்தியாவுக்கு இங்கு வருவதில் என்ன கவலைகள் இருக்கிறது என்பதை நாங்கள் கேட்போம். இந்தியாவின் கவலைகளை நாங்கள் சரி செய்து கொடுப்பதில் கவனம் செலுத்துவோம். ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் வருவதற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை என்று நான் நினைக்கிறேன்”
“மேலும் அனைத்து அணிகளுமே இங்கு வருவார்கள். விளையாட்டு மற்றும் அரசியல் தனித்தனி. இரண்டும் கலப்பதை நான் விரும்பவில்லை. நாங்கள்சிறந்ததை எதிர்பார்க்கிறோம். ஐசிசி விரைவில் சாம்பியன் டிராபி அட்டவணையை அறிவிக்கும் என்று நினைக்கிறோம். அறிவித்தால் நாங்கள் சீக்கிரம் எங்கள் வேலைகளை முடிப்போம்”
இதையும் படிங்க : விராட் கோலிக்கு மட்டுமே பிளான் பண்ணல.. வெள்ளிக்கிழமை அதை செஞ்சுடுவோம்.. மொத்த திட்டம் இருக்கு – நாதன் வயன் பேட்டி
“ஐசிசி இடம் எங்களுக்கு இருந்த எல்லா கேள்விகளையும் எழுதி அனுப்பியிருக்கிறோம். அவர்களது பதில்களுக்காக காத்திருக்கிறோம். இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் மரியாதையே முதன்மையானது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கும். நாங்கள் ஹைபிரிட் மாடலில் நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்” எனக் கூறியிருக்கிறார்.






