சிஎஸ்கே-க்கு அடி மேல் அடி; இன்றைய போட்டியிலும் முக்கிய வீரர் காயம்!

0
278
CSK

இன்று 16வது ஐபிஎல் சீசனின் 17 வது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சென்னை அணியில் தீக்சனா மற்றும் ஆகாஷ் சிங் இருவரும் சான்ட்னர் மற்றும் தீபக் சகர் இருவருக்கு பதிலாக இடம் பெற்றார்கள்.

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் துஷார் பந்துவீச்சில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து மூன்றாவது விக்கட்டுக்கு படிக்கல் அனுப்பப்பட்டார். அவர் 26 பந்தில் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த இரண்டு விக்கட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார்.

சஞ்சு சாம்சனுக்கு அடுத்து ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் களம் இறக்கப்பட்டார். இவர் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் அரை சதம் அடித்து 52 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு நடுவில் ஆகாஷின் பந்துவீச்சில் பந்தை அஸ்வின் தூக்கி அடிக்க அதை சென்னை வேகப்பந்துவீச்சாளர் மகலா கேட்ச் பிடித்தார். அப்போது அவர் விரல்களுக்கு இடையில் காயம் பட்டது.
கடைசியில் அவர் வீச வேண்டிய இரண்டு ஓவர்களுக்கு அவரால் பந்து வீச வர முடியவில்லை. இதனால் அவரது இடத்தில் துஷார் வீசினார். மகலா இரண்டு ஓவர்கள் மட்டும் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. சிம்ரன் ஹெட்மையர் ஆட்டம் இழக்காமல் 18 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரல் நான்கு ரன்கள், ஆடம் ஜாம்பா ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். சென்னை தரப்பில் மிக சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்களில் 21 ரன் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.