நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 16வது வீரராக தமிழக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி இந்தியா வந்திருக்கிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது.
கடைசி இரண்டு டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு
இந்த நிலையில் இந்திய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் இருந்து கேஎல்.ராகுல் நீக்கப்படவில்லை. மேலும் அவர் இந்திய அணியில் தொடர செய்கிறார். அதே சமயத்தில்முதல் டெஸ்ட் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட 15 வீரர்களும், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடர்கிறார்கள்.
தமிழக வீரர் சேர்ப்பு
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக 150 ரன்கள் அடித்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவரது அதிரடி சதம் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கான மாற்றத்தை தேட வேண்டிய கட்டாயம் இரண்டும் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா புனே மைதானத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதற்கு அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : 388 ரன்.. கேப்டன் ருதுராஜ் சதம்.. சிஎஸ்கே வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான வாழ்த்து.. ரஞ்சி டிராபி 2024
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (சி), ஜஸ்பிரித் பும்ரா (து.கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (வி.கீ), துருவ் ஜூரல் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.






