இந்தக் காலகட்ட கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட காயத்தில் இருந்து திரும்பி வந்த அவர் முன்பிருந்ததை விட பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் ஆபத்தாக மாறி இருக்கிறார். இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே பேசியிருக்கிறார்.
பும்ரா தன்னுடைய தனித்துவ பந்துவீச்சு முறையினால் மட்டும் இல்லாமல், ஆடுகளத்தை சீக்கிரத்தில் புரிந்து கொள்கின்ற அறிவின் காரணமாக ஈடு செய்ய முடியாத பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இதன் காரணமாகவே அவர் எந்த வடிவ கிரிக்கெட்டிலும், ஆடுகளம் எப்படி இருந்தாலும் சிறப்பாக செயல்படுகிறார்.
டி20 உலகக்கோப்பை வெற்றி விழாவின்போது பேசிய விராட் கோலி பும்ராவை தலைமுறையின் பந்துவீச்சாளர் என்றும், அவரை இந்தியாவின் சொத்து என அறிவிக்கலாம் எனவும் மிகவும் புகழ்ந்து பாராட்டி பேசி இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் அவர் குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பும்ரா பற்றி கூறும் பொழுது “பும்ராவின் சிறந்த பந்து வீச்சுக்கு நான் கிரெடிட் எடுக்க முடியுமா? நிச்சயமாக நான் அப்படி செய்ய மாட்டேன். ஏனென்றால் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை வருகின்ற சிறப்பு பந்துவீச்சாளர். அவரை அவரே உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் பந்துவீச்சு சிறப்புக்கு காரணம் அவர்தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்ஸ்மேன் அவரை பவுண்டரி அடித்ததைக் கூட அவர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். அவர் மிகவும் போட்டி குணம் வாய்ந்தவர் மேலும் தொடர்ந்து முன்னேற விரும்பக் கூடியவர். அவரைக் கையாள்வதிலும் பாதுகாப்பதிலும் நாம் மிகவும் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : தோனிக்கு இடமில்லை.. யுவராஜ் சிங் தேர்ந்தெடுத்த ஆல் டைம் பிளேயிங் XI.. 3 இந்திய 4 ஆஸி வீரர்கள்
நான் அவருடன் பேசும் பொழுது அவர் மிகவும் தெளிவான மனநிலையில் இருப்பதையும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரிந்திருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். அவரை எதிர்கொள்ளும் பொழுது ஒரு பேட்ஸ்மேன் சிரமப்படுவதை அவர் புரிந்து கொள்கிறார். பின்பு சூழ்நிலைக்கு தகுந்தபடி செயல்படவும் தெரிந்திருக்கிறார். மேலும் பேட்ஸ்மேன் என்ன செய்ய நினைக்கிறார் என்பதை சரியாக யோசித்து அதற்கு தகுந்த நுணுக்கங்களைச் சரி செய்யக்கூடியவர். எந்த வடிவ கிரிக்கெட்டிலும் அவரே நம்பர் ஒன்னாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






