நேற்று இங்கிலாந்தில் நடைபெற்ற உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் யுவராஜ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாம்பியன் ஆனது. இந்த நிலையில் யுவராஜ் சிங் தன்னுடைய ஆல் டைம் பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறார். அதில் மகேந்திர சிங் தோனிக்கு அவர் இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று உடன் இந்திய அணி வெளியேறி வந்ததும் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் பொறுப்பை விட்டு வெளியேறினார். இதற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு யாருக்கு என்கின்ற கேள்வி வந்த பொழுது வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் முன்னணியில் இருந்தார்கள்.
இந்த நிலையில் சச்சின் பரிந்துரையின் பேரில் தோனி திடீரென கேப்டன் ஆக்கப்பட்டார். இதற்குப் பிறகு தோனி தலைமையில் இந்தியா மூன்று ஐசிசி தொடர்களை வென்று அவர் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் என பெயர் எடுத்தார். எனவே இந்தப் பிரச்சினையில் தோனி மீது யுவராஜ் சிங்குக்கு தனிப்பட்ட முறையில் கோபங்கள் இருப்பதாக வெளியில் பேசப்பட்டது. ஆனாலும் தன்னிடம் உண்மையைப் பேசிய ஒரே நபர் தோனிதான் என யுவராஜ் சிங் அவரைப் பற்றி நல்லவிதமாகத்தான் பேசியிருப்பார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்த பிளேயிங் லெவனில் தோனிக்கு இடமில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது.
யுவராஜ் சிங் தன்னுடைய ஆல் டைம் பிளேயிங் லெவனில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரையும் முதல் இரண்டு இடங்களில் வைத்திருக்கிறார். இதற்கு அடுத்த இரண்டு இடங்களில் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் கொண்டு வந்திருக்கிறார்.
இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆடம் ஆகியோர் இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அவருடைய அணியில் சுழல் பந்துவீச்சாளர்களாக லெஜென்ட்கள் ஷேன் வார்ன் மற்றும் முத்தையா முரளிதரன் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக வாசிம் அக்ரம் மற்றும் கிளன் மெக்ராத் இருவரையும் யுவராஜ் சிங் வைத்திருக்கிறார். மேலும் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராகவும் ஆல் ரவுண்டராகவும் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்ட்டாப் இடம் பெற்று இருக்கிறார். யுவராஜ் சிங் தன்னுடைய பெயரை இதில் சேர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அவங்க 2 பேர் நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க.. இனிமே என் ஆட்டத்தை பாருங்க – ஜெய்ஸ்வால் பேட்டி
யுவராஜ் சிங் தேர்ந்தெடுத்த ஆல் டைம் பிளேயிங் லெவன் :
சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், மெக்ராத், வாசிம் அக்ரம் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாப்.






