நடக்கும் டி20 உலக கோப்பை தொடரின் ஒரு பகுதி அமெரிக்க நாட்டிலும் நடத்தப்படுகிறது. இதற்கென புதிதாக நியூயார்க் நகரில் கட்டப்பட்ட நாசாவ் கவுன்டி சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் வீரர்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது. தற்பொழுது இது குறித்து ஐசிசி புதிய உத்தரவாதம் ஒன்றை அளித்திருக்கிறது.
குறிப்பிட்ட இந்த மைதானத்தின் ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பது பிரச்சினையாக இல்லை. அதே சமயத்தில் பந்து தாழ்வாக வருவதும் பிரச்சனையாக இல்லை. ஆனால் எதிர்பாராத இடத்தில் இருந்து பந்து அதிகமாக பவுன்ஸ் ஆவது பெரிய ஆபத்தை பேட்ஸ்மேன்களுக்கு உருவாக்குகிறது.
இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் உடலில் எல்லாப் பாகங்களிலும் அடி வாங்குகிறார்கள். மேலும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையிலும் ஆடுகளம் இல்லை. இங்கு இலங்கை முதலில் பேட்டிங் செய்து 77 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதற்கு அடுத்து அயர்லாந்து 96 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்த நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டி இதே மைதானத்தில்தான் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்த மைதானத்தின் ஆடுகளம் மற்றும் ஐசிசி குறித்து நிறைய விமர்சனங்களை முன் வைத்தார்கள்.
தற்பொழுது இதற்கு பதில் அளித்திருக்கும் ஐசிசி தரப்பில் கூறும் பொழுது “டி20 இன்க் மற்றும் ஐசிசி நியூயார்க் நாசாவ் கவுன்டி மைதானத்தின் ஆடுகளம் அனைவரும் விரும்பியபடி விளையாடுவதற்கு இல்லை என்கின்ற விஷயத்தை ஏற்றுக் கொள்கிறது.
இதையும் படிங்க : டி20 உ.கோ.. இந்த தமிழக வீரரை தேர்வு செய்யாத காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த அபிஷேக் நாயர்
உலகத்தரம் வாய்ந்த மைதானக்குழு நேற்றைய போட்டியின் முடிவில் இருந்து நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த ஆடுகளங்களை வழங்கவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்” என்று கூறி இருக்கிறது. இதன் மூலம் நாளை மறுநாள் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு நல்ல ஆடுகளம் கிடைக்கும் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.