சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் 5 நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், இன்றுமுதல் பயிற்சி போட்டிகள் தொடங்கி இருக்கின்றன. இந்திய அணி தரப்பில் நாளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. கடைசி நேரத்தில் பும்ரா விலகியதால், அவரது இடத்தில் ஹர்சித் ராணா கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய அணி ஐசிசி டி20 தொடரை கைப்பற்றி உள்ளதால், சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 போட்டிகளில் விளையாடவுள்ளது.
யாருக்கு எவ்வளவு பரிசு:
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெல்லும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த தொடரை விடவும் இம்முறை 53 சதவிகிதம் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்லும் அணிக்கு ரூ.19.45 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு ரூ. 9.72 கோடியும், அரையிறுதி சுற்றில் தோல்வியடையும் அணிக்கு ரூ.4.86 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். அதேபோல் குரூப் சுற்றில் வெல்லும் அணிகளுக்கு ரூ.2.95 கோடி பரிசுத் தொகையாகன் அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் 5வது மற்றும் 6வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3.03 கோடி பரிசும், 7 மற்றும் 8 ஆகிய இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ.1.21 கோடியும் கிடைக்கும்.
குறைந்தபட்ச பரிசு எவ்வளவு:
அதேபோல் இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.1.08 கோடி பரிசுத்தொகை அளிக்கப்படவுள்ளது. உலகக்கோப்பை தொடரை விடவும் குறைந்த பரிசுத்தொகையாக இருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்னை பற்றி அகர்கர் பேசிய விதம் நல்லது தான்.. அது உதவியா தான் இருந்துச்சு – கருண் நாயர் விளக்கம்
ரசிகர்கள் மத்தியில் இந்த பரிசுத்தொகை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக சாம்பியன்ஸ் டிராபிக்கான பரிசுத்தொகை ரூ.59 கோடியாகும். ஹைபிரிட் மாடலில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






