தற்போது இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாபேவில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்தத் தொடர் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கு அடுத்து இந்திய அணி இலங்கை சென்று விளையாடும் இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களுக்கான தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமித்து அறிவித்தது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இலங்கை சுற்றுப்பயணத்தில் முதல் முதலாக இணைகிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கான அணித் தேர்வு ஆலோசனையிலும் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
இதேபோல் இந்திய தொடர் மற்றும் இங்கிலாந்து தொடர் என இரண்டு தொடர்களுக்கு இடைக்கால பயிற்சியாளராக இலங்கை அணிக்கு முன்னாள் இலங்கை லெஜெண்ட் வீரர் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த இங்கிலாந்தின் சில்வர் வுட் டி20 உலகக் கோப்பை தோல்வியின் காரணமாக தாமாக வெளியேறி விட்டார்.
இந்திய அணி இந்த மாதம் இறுதியில் ஜூலை 26ஆம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கையில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் ஜூலை 26,27,29 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் மூன்று போட்டிகளும் பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் போட்டிகள் ஆகஸ்ட் 1,4,7 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் இந்த மூன்று போட்டிகளுமே கொழும்பு மைதானத்தில் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை.. ஆள விடுங்க நான் போறேன்.. கேப்டன் ஹசரங்கா எடுத்த திடீர் முடிவு.. இலங்கை கிரிக்கெட்டில் சலசலப்பு
இந்திய அணிக்கு முதல்முறையாக கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வருவதும், மேலும் இலங்கை அணிக்கு சமன் ஜெயசூர்யா முதல் முறையாக பயிற்ச்சியாளராக வருவதும் இருநாட்டு ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் விளையாட இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.






