அமெரிக்காவின் எம்எல்சி டி20 லீக் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இன்று இந்த தொடரின் ப்ளே ஆப் சுற்றி எலிமினேட்டர் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் கேப்டன் பாப் டு பிளேசிஸ் அதிரடியில் அந்த அணி வென்றது.
இந்த போட்டிக்கான நாட்டில் வெற்றி பெற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த டிவால்ட் பிரிவியஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் 8 பந்தில் 9 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
தாக்குப்பிடித்து விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சயான் ஜஹாங்கீர் 23 பந்தில் 26 ரன்கள், மோனங்க் பட்டேல் 41 பந்தில் 48 ரன்கள், ரஷீத் கான் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆரோன் ஹார்டி இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே மற்றும் கேப்டன் பாப் டு பிளேசிஸ் இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள். இந்த ஜோடி முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை திருப்பி மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வெளியேற்றி விட்டது.
இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 12.3 ஓவரில் 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாப் டு பிளேசிஸ் 47 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் இந்த சீசனில் ஒருமுறை சதமும் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிட்னஸ் பிரச்சனை இல்லை.. பாண்டியாவை கம்பீர் குழு விரும்பாததற்கு இதுதான் காரணம் – ரசல் அர்னால்டு கருத்து
இதற்கு அடுத்து ஆட்டம் இழக்காமல் டெவோன் கான்வே 43 பந்தில் 51 ரன், ஆரோன் ஹார்டி அதிரடியாக 22 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்கள். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வென்றது. எலிமினேட்டர் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து தகுதிச்சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது!