டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்தியாவுக்கு உதவிய ஆஸி.. பாகிஸ்தானை கீழே தள்ளியது.. முழு தகவல்கள்!

0
963
WTC

தற்பொழுது 2023-2025 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடந்து முடிந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய கைப்பற்றியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தால், இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகள் வழங்கப்படும்.

- Advertisement -

மேலும் ஒரு அணி எடுக்கும் புள்ளிகளை விட, எத்தனை போட்டிகளில் விளையாடி, எத்தனை போட்டிகளில் வெற்றி தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதை வைத்து, வெற்றி சதவீதம் அளவிடப்படுகிறது. உதாரணமாக நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வி என்றால், வெற்றி சதவீதம் 50 என்று கணக்கிடப்படும். இந்த வெற்றி சதவீதத்தைக் கொண்டே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ளும் இரண்டு அணிகள் முடிவு செய்யப்படுகிறது.

இந்த வகையில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் முடிவடைவதற்கு முன்னால், இன்று இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது.

இந்திய அணி இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை வென்று, ஒரு போட்டியை டிரா செய்து,16 புள்ளிகள் மற்றும் வெற்றி சதவீதமாக 66.6 பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்று, வெற்றி சதவீதம் 100 பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

தற்போது பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி தற்பொழுது இரண்டாம் இடத்திற்கு வந்து, இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் வெற்றி சதவீதமாக ஒரே அளவில் 66.6 என்று இருக்கின்றன. ஆனால் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறது. பாகிஸ்தான் அணி தற்பொழுது 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்கிறது. எனவே இதன் காரணமாக இந்திய அணிக்கு முதல் இடமும், பாகிஸ்தான அணிக்கு இரண்டாம் இடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு டெஸ்டில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி பெற்று, வெற்றி சதவீதம் 50 ஆக உள்ள நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து போலவே போட்டி மற்றும் வெற்றி சதவீதத்தை கொண்டிருக்கும் பங்களாதேஷ் நான்காவது இடத்திலும் இருக்கின்றன.

ஆஸ்திரேலியா அணி ஆறு டெஸ்ட் போட்டியில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா என 30 புள்ளிகள் எடுத்து, 41.67 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒரு தோல்வி, ஒரு டிரா என நான்கு புள்ளிகள் உடன், 16.67 வெற்றி சதவீதமாகக் கொண்டு ஆறாவது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா என, ஒன்பது புள்ளிகள் உடன், 15 வெற்றி சதவீதமாகக் கொண்டு ஏழாவது இடத்தில் இருக்கிறது. இலங்கை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டையும் தோற்று, எந்த புள்ளியையும், எந்த வெற்றி சதவீதத்தையும் பெறாமல் பூஜ்ஜியத்தில் எட்டாம் இடத்தில் இருக்கிறது!