வெஸ்ட் இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வா ? பிசிசிஐ அறிவிப்பு

0
142
Virat Kohli and Jasprit Bumrah

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சி ஆட்டத்தின் போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டு, அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை மறுநாள் செளதாம்டனில் துவங்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை ரோகித் சர்மா வழக்கம்போல் கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் நேற்று ஆடி முடித்துள்ள, விராட் கோலி, ஜஸ்ப்ரீட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு முதல் டி20 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அதற்கடுத்த இரண்டு டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்பார்கள்.

- Advertisement -

இங்கிலாந்துடன் இந்த இரண்டு தொடர்களையும் முடித்துக்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்தில் இருந்து அப்படியே வெஸ்ட் இன்டீஸிற்குப் பறக்கிறது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் அணியோடு மோதுகிறது. இதில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் ஜூலை 22ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 7ஆம் தேதி முடிவடைகிறது.

தற்போது வெஸ்ட் இன்டீஸ் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கும், மற்றும் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வளிப்பது தொடர்பாக, இந்திய அணியுடன் இங்கிலாந்துச் சென்று இருக்கும் தேர்வு குழுத்தலைவர் சேத்தன் சர்மா, இந்திய அணிகேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டோடு கலந்து ஆலோசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அணிக்குத் தற்போது தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட், இலங்கைத் தொடரில் ஷிகர் தவான் கேப்டனாகவும், தென் ஆப்பிரிக்க தொடரில் விராட் கோலி, கே.எல்.ராகுல் கேப்டனாகவும், அடுத்து ரோகித் சர்மா கேப்டனாகவும், அதற்கடுத்து ரிஷாப் பண்ட் கேப்டனாகவும், தற்போது ஜஸ்ப்ரீட் பும்ரா கேப்டனாகவும் என ஆறு கேப்டன்களோடு இந்தக் குறுகிய காலத்தில் ஒரு பயிற்சியாளராகப் பயணித்துவிட்டார்.

- Advertisement -

இதை எந்தப் பயிற்சியாளர்களுமே விரும்பமாட்டார்கள். தற்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு வெஸ்ட் இன்டீஸ் தொடரில் ஓய்வளிப்பதில் ராகுல் டிராவிட்டுக்கு விருப்பம் இல்லையென்று தெரிகிறது. அதே நேரத்தில் ரோகித் சர்மாவின் வயதும், காயமும் அவருக்குச் சீரான ஓய்வு தேவையென்பதை வலியுறுத்துகிற காரணிகளாக இருக்கின்றன.

வெஸ்ட் இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் முன்னணி வீரர்களுக்கான ஓய்வு குறித்து இந்திய கேப்டன், பயிற்சியாளர், தேர்வு குழுத்தலைவர் ஆகியோர் இடையே இங்கிலாந்தில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தை, அடுத்தடுத்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி அடையப்போகும் மாற்றங்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆலோசனையாக அமையும்!