இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கைகளில் கருப்பு பட்டை அணிந்து ஆடுகளத்திற்கு வந்தது பார்வையாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அவர் தற்போது கருப்பு பட்டை அணிந்ததற்கான காரணம் இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியிருக்கின்றனர். சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை வென்று கொடுத்துள்ள நிலையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரில் களம் இறங்க உள்ளது.
இந்த நிலையில் இன்று போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கையில் கருப்பு பட்டை ஒன்றை அணிந்திருந்தார். பொதுவாக வீரர்கள் கருப்பு பட்டை அணிவதற்கான காரணம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் மறைவை குறிப்பிடும் விதமாக அணியப்பட்டிருக்கும் அல்லது வேறு ஏதாவது முக்கிய காரணமாக இருக்கும்.
இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் தற்போது கருப்பு பட்டை அணிந்ததற்கான காரணம் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் கடந்த புதன்கிழமை அன்று புற்றுநோய் காரணமாக தனது 77 வயதில் இயற்கை எய்தினார். புற்று நோய்க்காக லண்டனில் சிகிச்சை பெற்று சமீபத்தில் இந்தியா திரும்பியிருந்த நிலையில் கபில் தேவ் அன்ஷுமான் கெய்க்வாட்டின் குடும்பம் நிதி ரீதியாக சிரமப்படுவதாகவும் அவருக்கு உடனடியாக உதவி தேவை என்று பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. அவர் இந்தியா திரும்பிய நிலையில் வதேராவில் உள்ள பைலால் அமீன் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி மறைந்திருக்கிறார்.
இதையும் படிங்க:53 வருட ODI வரலாறு.. இந்தியா படைக்க இருக்கும் பிரம்மாண்ட சாதனை.. இன்று இலங்கை அணிக்கு எதிராக வருமா?
கெய்க்வாட் 1975ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் மற்றும் 10 அரை சதங்கள் உதவியுடன் 1985 ரன்கள் குவித்து இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் ஒரு சதம் உட்பட 269 ரன்கள் குவித்திருக்கிறார். விளையாட்டு வாழ்க்கை முடிந்ததும் அவர் தேசிய அணியின் பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.